ஆட்டத்தை ஆரம்பித்த புயல் சின்னம்! சென்னையில் கொட்டியது கன மழை!
ஆட்டத்தை ஆரம்பித்த புயல் சின்னம்! சென்னையில் கொட்டியது கன மழை!
UPDATED : நவ 12, 2024 07:55 AM
ADDED : நவ 12, 2024 06:39 AM

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. சென்னையில் இன்று (நவ.,12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக சென்னையில் நவ.11ம் தேதி முதல் நவ.15ம் தேதி வரை கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சென்னை மட்டும் அல்லாது, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை என பெரும்பாலான மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறி இருந்தது.
இந் நிலையில் தலைநகர் சென்னையில் நேற்றிரவு முழுவதும் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. சென்னை சென்ட்ரல், கிண்டி, மாம்பலம், மந்தைவெளி, கோடம்பாக்கம், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர்,சேப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. சைதைபேட்டை, ஆதம்பாக்கம், ஆலந்தூர், வேளச்சேரி ஆகிய பகுதிகளிலும் மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக நந்தனத்தில் 4.5 செ.மீ மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளான அண்ணா பல்கலை.யில் 4.4 செ.மீ., மீனம்பாக்கம் 3.9 செ.மீ., பள்ளிக்கரணை 3 செ.மீ., நுங்கம்பாக்கம் 2.4 செ.மீ., மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நகர்புறங்களில் மட்டும் அல்லாது, புறநகரிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டி உள்ளது. குறிப்பாக தாம்பரம், முடிச்சூர், சேலையூர், மாடவாக்கம், மேடவாக்கம், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கி உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட இடங்களிலும் விடாது மழை பெய்துள்ளது.
இடைவிடாது பெய்த மழையால் நள்ளிரவில் பணி முடிந்து வீடு திரும்பியவர்களும், அதிகாலையில் பணிக்குச் சென்றவர்களும் கடும் அவதிக்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் சரக்கு வாகன ஓட்டிகளும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இதனிடையே, தொடர்ந்து மழை கொட்டி வருவதால் கல்வி நிலையங்கள் இன்று இயங்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. சென்னையில் இன்று (நவ.,12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, குமரிக்கடலை ஒட்டிய பகுதிகளில், நாளை வரை மணிக்கு, 35 முதல், 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் பதிவான மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில்
பெருங்குடி 74.7
ஆலந்தூர் 56.4
அடையார் 55.2
மீனம்பாக்கம் 49.8
உத்தண்டி 47.1
கோடம்பாக்கம் 45
தேனாம்பேட்டை 39.4
வளசரவாக்கம் 34.5
மதுரவாயல் 33.3
ராயபுரம் 31.8
அண்ணாநகர் 29.7
சோழிங்கநல்லூர் 29.4
மாமல்லபுரம் 27
ஐஸ் ஹவுஸ் 25.2
கத்திவாக்கம் 24.9
திருவொற்றியூர் 24.6