வண்டலுாரில் தி.மு.க., நிர்வாகி வெடிகுண்டு வீசி படுகொலை
வண்டலுாரில் தி.மு.க., நிர்வாகி வெடிகுண்டு வீசி படுகொலை
ADDED : பிப் 29, 2024 11:45 PM

கூடுவாஞ்சேரி:வெடிகுண்டு வீசியும், கத்தியால் வெட்டியும், வண்டலுார் முன்னாள் ஊராட்சி தலைவர் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்துார் ஒன்றியம், வண்டலுாரைச் சேர்ந்தவர் ஆராவமுதன், 52; வண்டலுார் ஊராட்சி முன்னாள் தலைவர். காட்டாங்குளத்துார் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலராகவும், காட்டாங்குளத்துார் ஒன்றியக்குழு துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, அப்பகுதியில் விளம்பர பேனர் வைக்க ஏற்பாடு செய்திருந்தார். அதை பார்க்க, நேற்று இரவு 8:15 மணிக்கு, வண்டலுார் மேம்பாலம் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார்.
அப்போது, மேம்பாலம் அருகில் காரை வழிமறித்த மர்ம நபர்கள், அவர் மீது வெடிகுண்டு வீசினர். தப்பியோட முயன்ற அவரை, கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி, தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த ஆராவமுதனை, கட்சியினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர் கள், ஆராவமுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அவர் உடலை அனுப்பினர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த பகுதிகளில், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

