ஐந்தாண்டு பழைய ஜெனரேட்டரா? மாசு கட்டுப்பாட்டு கருவி வைக்கணும்!
ஐந்தாண்டு பழைய ஜெனரேட்டரா? மாசு கட்டுப்பாட்டு கருவி வைக்கணும்!
ADDED : நவ 21, 2024 01:01 AM
சென்னை:'டீசல் ஜெனரேட்டர்களில் மாசு கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாவிட்டால், சுற்றுச்சூழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் அறிக்கை:
'காற்று மாசு ஏற்படுத்துவதில், முக்கிய பங்கு வகிப்பதால், டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களில், மாசு கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டும்' என, டில்லியில் உள்ள, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு 2018ல் உத்தரவிட்டது.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களிலும், டீசலில் இயங்கும், ஐந்து ஆண்டுகள் பழமையான அல்லது 50,000 மணி நேரம் இயங்கிய ஜெனரேட்டர்கள் அனைத்திலும், மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும்.
மாசு கட்டுப்பாட்டு கருவி, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்த விபரங்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் உள்ளன.
டீசல் ஜெனரேட்டர் களில், மாசு கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தாவிட்டால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

