திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: 18 டேங்கர்கள் எரிந்து நாசம்; ரூ.12 கோடி டீசலும் வீணானது
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: 18 டேங்கர்கள் எரிந்து நாசம்; ரூ.12 கோடி டீசலும் வீணானது
ADDED : ஜூலை 14, 2025 01:54 AM

திருவள்ளூர்: சென்னையில் இருந்து வாலாஜா ரோடு ஸ்டேஷனுக்கு டீசல் எடுத்துச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே நேற்று அதிகாலை விபத்துக்கு உள்ளானது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின; 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து வீணானது.
சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை, டீசல் நிரப்பப்பட்ட 50 டேங்கர்களுடன் வாலாஜா ரோடு ஸ்டேஷன் நோக்கி சென்ற சரக்கு ரயில், அதிகாலை 5:10 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்தது.
பெரும் சத்தம்
வரதராஜபுரம் அடுத்த இருளர் காலனி என்ற இடத்திற்கு சென்ற போது, சரக்கு ரயிலில் பெரும் சத்தம் கேட்டது. இதையடுத்து, இன்ஜின் மற்றும் அதை ஒட்டியிருந்த ஒரு டேங்கர் மட்டும் இணைப்பு துண்டாகி முன்னால் சென்றன.
அதேநேரத்தில், துண்டிக்கப்பட்ட இரண்டாவது டேங்கரில் திடீரென தீப்பிடித்தது.
அதற்குள், இன்ஜின் மற்றும் ஒரு டேங்கர், 500 மீட்டர் துாரம் சென்ற நிலையில், ரயில் ஓட்டுநர் அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.
அத்துடன், அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்; மின் இணைப்பை துண்டிக்கவும் ஏற்பாடு செய்தார்.
அதற்குள், துண்டிக்கப்பட்ட இரண்டாவது டேங்கரில் பிடித்த தீ மேல்நோக்கி எரிந்ததால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்து, அந்தப்பகுதி முழுதும் புகை மூட்டம் சூழ்ந்தது. அத்துடன் தீ மளமளவென அடுத்தடுத்து, 19வது டேங்கர் வரைக்கும் பரவியது.
உடனடியாக, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், டேங்கர்களில் டீசல் இருந்ததால், தீயை அணைக்க முடியவில்லை.
நுரை தெளிப்பு
இதையடுத்து, சென்னை, அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ரசாயன கலவையுடன் கூடிய நுரையை தெளித்து, தீயை அணைக்கும் பணி நடந்தது.
அதற்குள், திருவள்ளூர் நகரம் முழுதும் கரும்புகை சூழ்ந்ததால், நகரவாசிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.
ஏறத்தாழ, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில், 18 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து விட்டன. அதிலிருந்த பல ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. மீதமிருந்த, 32 டேங்கர்கள்
தொடர்ச்சி 3ம் பக்கம்
பாதுகாப்பாக மீட்கப்பட்டன. ரயில் பாதைகளும் சேதமடைந்ததால், ரயில்களின் சேவையை உடனடியாக துவங்க முடியவில்லை. ஒரு பாதையில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.
சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், தமிழக அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால், திருவள்ளூர் ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.
பாக்ஸ்
------
தீ விபத்து ஏற்பட்டது எப்படி?
சரக்கு ரயிலில் இணைக்கப்பட்டிருந்த, 52 டேங்கர்களில், இரண்டு பிரேக் வேகன்கள் தவிர, மற்ற, 50 டேங்கர்களிலும் டீசல் நிரம்பி இருந்தது. ரயில் இன்ஜினில் இருந்து, 3வது டேங்கர் திடீரென தடம் புரண்டதில் ஏற்பட்ட தீப்பொறியால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது டேங்கரில் உராய்வு ஏற்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டு தடம் புரண்டு இருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, தலைமை பொறியியல் தொழில்நுட்ப அதிகாரி தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.