ADDED : ஜன 26, 2025 08:41 AM
வேங்கைவயல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்குவதால், இந்த வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்' என, மத்திய இணை அமைச்சர் முருகனும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
வேங்கைவயல் விவகாரத்தில், புகார் கொடுத்தவர்களை குற்றவாளிகள் என, தமிழக காவல் துறை கூறுகிறது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், பாதிக்கப்பட்ட மக்களை, பரிசோதனை என்ற பெயரில் வழக்கில் சிக்க வைக்கவும், இந்த அரசு ஏற்கனவே முயன்று வந்தது. இதை ஆரம்பத்திலேயே, நான் சுட்டிக்காட்டி வந்தேன். இப்போது பாதிக்கப்பட்ட மக்களே குற்றவாளிகள் என்று, காவல் துறை கூறுகிறது.
விசாரணையை முடிக்க வேண்டும் என்று வந்த அழுத்தம் காரணமாக, இந்த கொடூர முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
காவல் துறைக்கு அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கூறும் சமூக நீதி இது தானா?
புகார் கொடுத்த பட்டியலின மக்கள் மீதே, வழக்கை திருப்பும் இந்தக் கொடூரத்தை, காவல் துறை யாருக்காக செய்கிறது?
தமிழகத்தின் பல பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக் குவளை, இரட்டைச் சுடுகாடு, கோவில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. உலகம் காணாத மாபெரும் சமூக அநீதி, தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து நடக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் வேங்கைவயல் வழக்கை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

