தேசிய வங்கியில் வாங்கிய வீட்டு கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றி கொள்ளலாம்
தேசிய வங்கியில் வாங்கிய வீட்டு கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றி கொள்ளலாம்
UPDATED : டிச 05, 2024 02:26 AM
ADDED : டிச 05, 2024 12:27 AM

சென்னை : பிற வங்கிகளில் வாங்கிய வீட்டு கடனை, கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி துவக்கப்பட்டு உள்ளது. இது தவிர, 'டாப் அப்' எனப்படும் ஏற்கனவே வாங்கிய தொகையை விட, கூடுதலாக கடன் வாங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. அவை பயிர் கடன், நகை கடன் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கடன்களை வழங்குகின்றன.
அதன்படி, வீட்டு கடன் பிரிவில் அதிகபட்சம், 75 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு, 8.50 - 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. இப்போது, தேசிய வங்கி, பொதுதுறை வங்கி, தனியார் வங்கி போன்றவற்றில் வீட்டு கடன் வாங்கியவர்கள், அந்த கடனை, கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி துவக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல வங்கிகள் வீட்டு கடன்களை வழங்கும் போது, அசல் மற்றும் வட்டியை மொத்தமாக சேர்த்து, இ.எம்.ஐ., எனப்படும் மாதாந்திர தவணைகளாக கணக்கிட்டு, மாதந்தோறும் வசூலித்து வருகின்றன.
அதே சமயம், கூட்டுறவு வங்கியில் இ.எம்.ஐ., முறைக்கு பதில், அசல் தொகை செலுத்துவதற்கு ஏற்ப வட்டி குறைகிறது.
எனவே, எந்த வங்கியில் வீட்டு கடன் வாங்கி இருந்தாலும், அங்கு வட்டி அதிகம் இருப்பதாக கருதுவோர், அந்த கடனை கூட்டுறவு வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதி துவக்கப்பட்டு உள்ளது.
இது தவிர, ஏற்கனவே வாங்கிய கடன் தொகையை விட, கூடுதல் தொகையை கடனாக வாங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வசதிகளை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.