ADDED : ஜூன் 05, 2025 05:03 AM

மதுரை: 'பொது சுகாதாரத்தை மோசமாக பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தப்படுவதை மக்கள் நல அரசு உறுதி செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திண்டுக்கலைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:திண்டுக்கல் - திருச்சி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது.
பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துவோருக்கு, மது அருந்துவோரால் இடையூறு ஏற்படுகிறது. கடையை மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
துார கட்டுப்பாடு விதி
நேற்றையை விசாரணையின் போது, டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இரு வெவ்வேறு பள்ளிகள் 30 மற்றும் 50 மீட்டரில் அமைந்துள்ளன. வழிபாட்டுத்தலம் குறுகிய துாரத்திலும், அரசு மருத்துவமனை 100 மீட்டரிலும் அமைந்துள்ளதாக மனுதாரர் கூறுவது தவறானது.
'மேலும் பள்ளி, வழிபாட்டுத்தலம், மருத்துவமனையிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் டாஸ்மாக் இருக்க வேண்டும் என்ற துார கட்டுப்பாடு விதிமுறை இப்பகுதிக்கு பொருந்தாது' என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:சில சூழ்நிலைகளில் துார அளவுகோலை கடைப்பிடிப்பது சரியானதல்ல என இந்த நீதிமன்றம் கருதுகிறது.
ஒரு டாஸ்மாக் கடை வாயிலாக, அப்பகுதியில் சாலையை பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக பள்ளி நேரங்களில் குழந்தைகளுக்கு தொந்தரவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
முதன்மை கடமை
அரசு தன் மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்வது மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை முதன்மை கடமைகளாக கருத வேண்டும்.
மக்கள் நல அரசு, பொது சுகாதாரத்தை பாதிக்கும் டாஸ்மாக் கடைகளை நிறுவுவதற்கு பதிலாக, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த முழுமனதுடன் பாடுபட வேண்டும்.
மக்கள் நல அரசு, ஒருபுறம் அதிக மருத்துவமனைகளை நிறுவி, மறுபுறம் ஒரே நேரத்தில் டாஸ்மாக் கடைகளை நிறுவுவது முரண்பாடானது.
பொது சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க, மதுவிலக்கை படிப்படியாக மெதுவாக அமல்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். திண்டுக்கல் - திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இரண்டு வாரங்களில் மூட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.