வீட்டு வேலை செய்த சிறுமி சித்ரவதை செய்து கொலை? 6 பேரிடம் விசாரணை சிகரெட் சூடு காயங்களால் வலுக்கும் சந்தேகம்
வீட்டு வேலை செய்த சிறுமி சித்ரவதை செய்து கொலை? 6 பேரிடம் விசாரணை சிகரெட் சூடு காயங்களால் வலுக்கும் சந்தேகம்
ADDED : நவ 03, 2024 02:52 AM
சென்னை:அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம மான முறையில் இறந்த, வீட்டு வேலை செய்யும் சிறுமியின் உடலில், சிகரெட் சூடு உள்ளிட்ட காயங்கள் இருந்ததால் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
திடுக்கிடும் பல தகவல்
சென்னை, அமைந்தகரை, சதாசிவம் மேத்தா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் முகமது நவாஸ், 40. வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார். இவரது மனைவி நாசியா, 30. இவர்களுக்கு, ஆறு வயதில் ஒரு குழந்தை உள்ளது.
நவாஸ் வீட்டிலேயே தங்கி, கடந்த ஓராண்டாக தஞ்சாவூரைச் சேர்ந்த அருந்ததி தேவி, 15, என்ற சிறுமி, வீட்டு வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி யன்று, குளிப்பதற்காக கழிப்பறைக்கு சென்ற சிறுமி, நீண்ட நேரமாக வெளியில் வராமல் இருந்ததாகவும், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமி இறந்த நிலையில் கிடந்ததாகவும்கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கவில்லை. சம்பவம் நடந்த ஒருநாளுக்கு பின், நேற்று இரவு அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாருக்கு, தாமதமாக தகவல் தந்ததாலும், சிறுமியின் உடலில் சிகரெட்டால் சூடு போட்டது போல் காயங்கள் இருந்ததாலும் சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து, உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். இதில், திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாயின.
அனுமதியில்லை
சிறுமியை, உறவினர் வாயிலாக வீட்டு வேலைக்காக அழைத்து வந்து, முறையாக சம்பளம் கொடுக்காமல் இருந்துள்ளனர். சிறுமியின் பெற்றோரை பார்க்கவும் அனுமதிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தீபாவளி நாளில் முகமது நவாஸ், அவரது மனைவி மற்றும் நவாசின் நண்பர்கள் சேர்ந்து, சிறுமியை கொடூரமாக தாக்கியதில் மயங்கி இறந்திருக்கலாம் என தெரிகிறது.
நவாஸ் குடும்பத்தினர், வீட்டில் வாசனை திரவத்தை தெளித்து, ஊதுபத்தியை ஏற்றிவிட்டு உறவினர் வீட்டிற்கு தப்பியுள்ளனர்.
பின், நண்பர்களுடன் சேர்த்து, ஒருநாள் கழித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. சம்பவம் தொடர்பாக, முகமது நவாஸ் அவரது மனைவி நாசியா மற்றும் அவரது நண்பர் லோகேஷ், 25, அவரது மனைவி ஜெயசக்தி, 24, சீமா, 29, மற்றெரு பணிப்பெண் மகேஸ்வரி, 44, உள்ளிட்ட ஆறு பேரை, கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமியின் உடலில் அதிக அளவில் காயங்கள் இருப்பதால், பல நாட்களாக சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், பிரேத பரிசோதனைக்கு பின், சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்பது தெரிய வரும் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.