UPDATED : டிச 27, 2024 03:13 PM
ADDED : டிச 27, 2024 03:06 PM

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தலைவர் திருமாவளவன், நாளொரு பேட்டியும் பொழுதொரு கருத்தையும் கூறி
வருகிறார். வி.சி., நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் ஆரம்பித்த பிரச்னை
இன்னும் முடியவில்லை. அந்த மாநாடு திமுக ஆட்சிக்கு மறைமுக எதிர்ப்பு
மாநாடாகவே கருதப்பட்டது. திமுகவுக்குள் கண்டனங்கள் எழுந்ததும் ஸ்டாலினைப்
பார்த்து பிரச்னையை பூசி மெழுகினார் திருமா.
அதன் பிறகு வந்தார்
அப்போது வி.சி., கட்சியில் துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா.
ஆட்சில் பங்கு என அவர் கொளுத்திப் போட அதுவும் பற்றிக்கொண்டது. பின்னர்
திருமாவும் ஸ்டாலினும் பெயரளவுக்கு ராசி ஆனார்கள்.
அதன் பிறகு
திருமா அளித்த சில பேட்டிகளும், ‛‛ஈயம் பூசியது மாதிரியும் இருக்கணும்,
பூசாதது மாதிரியும் இருக்கணும்'' கதையாக பட்டும் படாமல் பேட்டி
அளித்துக்கொண்டு இருக்கிறார். அதிமுக கூட்டணியிலும் ஒரு துண்டை போட்டு
வைக்கிறார் திருமா என்ற விமர்சனமும் எழுந்தது.
இப்போது அதை
உண்மையாக்கும் வகையில், ‛‛அதிமுகவின் வீழ்ச்சி பா.ஜ.,வுக்கு இடம் தந்து
விடும்'' என்று சொல்லி, அதிமுகவுக்காக கவலைப்பட்டு கண்ணீர் சிந்தி
உள்ளார்.
இது அப்பட்டமான அதிமுக ஆதரவு நிலைப்பாடு என்று சிறு
குழந்தைக்கு கூட சொல்லிவிடும். ‛‛திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக நான்
இருக்கிறேன்'' என்று அவர் சொல்வது அதிமுகவையும் சேர்த்து தான் என்பதால்,
தேவைப்பட்டால் அணி மாறலாம் என்பதையே சொல்லாமல் சொல்கிறார் திருமா
என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
ஆக, அடுத்த சட்டமன்ற தேர்தலின்
போது கூட்டணி கணக்குகள் மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்ற
கருத்து, திருமாவின் நேற்றைய பேட்டி மூலம் வலுவடைந்துள்ளது.

