பேசி பழகிய பொய்;- வாங்கி பழகிய கை;- போட்டு பழகிய பை
பேசி பழகிய பொய்;- வாங்கி பழகிய கை;- போட்டு பழகிய பை
ADDED : ஜூலை 21, 2025 01:36 AM

தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சிவா, பெருந்தலைவர் காமராஜரை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து, ஒரு விமர்சனத்தை வைத்திருப்பது, வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஏழ்மையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, ஏழ்மையிலேயே தன் வாழ்வை முடித்துக் கொண்ட ஒரு மகத்தான தலைவர் காமராஜர்.
எளிமை நிறைந்த அந்த மாபெரும் தலைவரை கொச்சைப்படுத்துவது போல, 'ஏசி' வசதி இல்லாமல் காமராஜர் ஒரு நாளும் இருந்ததில்லை என்று, ஒரு பொய்யை சிவா விதைத்திருக்கிறார்.
அடுத்து அவர் செல்லும் இடங்களில் எல்லாம், சுற்றுலா மாளிகையில் தங்குவதற்கு வசதியாக, கருணாநிதி, 'ஏசி' வசதி செய்து கொடுத்தார் என்று இன்னொரு பொய்யையும் விதைத்துஇருக்கிறார்.
நெருக்கடி நிலை காலத்தில் காமராஜர், கருணாநிதியின் கரங்களை பற்றி, 'இந்த நாட்டை, இந்த நாட்டின் ஜனநாயகத்தை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என்று வேண்டிக் கொண்டதாகவும், ஒரு மிகப்பெரிய பொய்யை சிவா விதைத்திருக்கிறார். பொய்யையும், வெறுப்பையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு, தமிழ் சமுதாயத்தில் தங்கள் கட்சியை வளர்த்தவர்கள் தி.மு.க.,வினர்.
டில்லியில் வெயில்
காமராஜர் எப்போதும் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து, இயற்கையான காற்றை தழுவிய நிலையிலேயே தான் கண்ணுறக்கம் கொள்வது வழக்கம்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் பொறுப்பேற்ற பின், பெரும்பாலான நேரம் டில்லியில் இருக்க வேண்டியது நேரிட்டது. டில்லியில் கோடைக் காலத்தில் சாதாரண மனிதர்களால் கூட, கடுமையான வெயில் தரக்கூடிய வெப்பதைத் தாங்க முடியாது.
வயது முதிர்ந்த நிலையில், உடல் தளர்ந்த நிலையில், காமராஜர் அந்த வெப்பத்திலிருந்து விடுபடுவதற்காக, அங்கே அவருடைய அறையில் குளிர்சாதன வசதியை செய்து கொடுத்திருந்தனர்.
அதற்கு பின், திருமலைப்பிள்ளை வீதியில், அவர் இருந்த வீட்டில் படுக்கையறையில் மட்டும் ஒரே ஒரு குளிர்சாதன பெட்டியை, அதுவும் காமராஜரின் கடைசி காலத்தில் தான் வைத்தனர்.
காமராஜர் எங்கு சென்றாலும், எளிமையாகவே தன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, யாருக்கும் எவ்வித சிரமமும் கொடுக்காமல் திரும்பி வருவார்.
மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த போது, பயணத்தை முடித்துவிட்டு இரவு நேரத்தில் சுற்றுலா மாளிகையில் வந்து தங்கினார்.
அந்த அறையில் போதிய அளவுக்கு காற்றோட்டம் இல்லாததால், வெளியே இருக்கக்கூடிய மரத்தடியில் அந்த கட்டிலை கொண்டு வந்து போடச் செய்து, அவர் இரவு முழுதும் கண்ணுறக்கம் கொண்டார்.
இந்தச் செய்தி அறிந்த அன்றைய முதல்வர் கருணாநிதி, தமிழகம் முழுதும் இருக்கக்கூடிய சுற்றுலா மாளிகைகளில், 'ஏசி' வசதிக்கு ஏற்பாடு செய்தார்.
அது, காமராஜர் கேட்டு செய்தது அல்ல; காமராஜருக்காக செய்ததும் அல்ல. 'ஏசி' அறை இருந்தால் தான் போய் தங்குவேன் என்று காமராஜர் அடம் பிடிக்கவும் இல்லை.
தரம் தாழ்ந்த உரை
எனவே, சிவாவின் கருத்து, மிக மோசமான, தரம் தாழ்ந்த உரை என்று தான் சொல்ல வேண்டும். எப்பொழுதுமே சொல்லுவர், பாதி உண்மை என்பது, பொய்யை விட மிக மோசமானது.
இப்பொழுது சிவா சொல்லியிருப்பது பாதி உண்மை தான். ஆனால், அதன் உள்நோக்கம் என்பது மிக மோசமானது.
கருணாநிதியின் கரங்களை பற்றி உருக்கமாக, 'நீங்கள் தான் இந்த நாட்டையும், நாட்டின் ஜனநாயகத்தையும் காக்க வேண்டும்' என்பது போல, ஒரு வேண்டுகோளை காமராஜர் விடுத்திருந்தால், அதற்கு எவ்வளவு முக்கியத்துவத்தை கொடுத்து, நெஞ்சுக்கு நீதி நுாலில் கருணாநிதி பதிவு செய்திருப்பார் என்பதை, நாம் அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்.
ஆனால், நெஞ்சுக்கு நீதி நுாலின் இரண்டாம் பாகத்தில், ஐந்து பக்கங்கள் காமராஜரோடு, அவருக்கு நேர்ந்த நெருக்கடி கால சந்திப்புகளை விவரிக்கிறார் கருணாநிதி.
அப்படி விவரிக்கிற போது, 'நான் பலமுறை காமராஜரை போய் சந்தித்து, அவருடைய அறிவுரைகளை, ஆலோசனைகளை பெற்றிருக்கிறேன்' என்கிறார் கருணாநிதி.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவருடைய வீட்டில் காமராஜரும், நானும், மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை மூன்று மணி நேரம் நெருக்கடி நிலை பிரகடனம் குறித்து மனம் விட்டு கருத்துகளை பரிமாறிக் கொண்டோம் என்றும் சொல்லியுள்ளார்.
எந்த இடத்திலும் காமராஜர், கருணாநிதியின் கரங்களை பற்றி, நீங்கள் தான் இந்த நாட்டை காக்க வேண்டும் என்பது போல, ஒரு போதும் சொன்னதில்லை.
காமராஜர் நுாற்றாண்டு மலரை முரசொலி வெளியிட்ட போது, அந்த மலரில் கருணாநிதி எழுதிய கட்டுரையில், 'எனக்கு பெருந்துணையாக விளங்கிய பெருந்தலைவர் காமராஜர்' என்ற தலைப்பிட்டு அவரே எழுதியிருக்கிறார்.
சிவா கூறுவது, உண்மையின் கலப்பே இல்லாத பொய்யை தவிர வேறு ஒன்றும் இல்லை.
இப்படி பொய்யை பரப்பி, பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து, மக்களை பிரிப்பதற்கு, வேறுபாட்டை வளர்ப்பதற்கு, வெறுப்பை அடிப்படையாக வைத்து அரசியலை நடத்தியே பழக்கப்பட்ட தி.மு.க.,வின் ஒரு தளபதியாக இருக்கும் சிவா, தன் நிலை தாழ்ந்து இப்படி காமராஜரை பற்றி பேசியிருப்பது அபத்தமான ஒன்று.
கண்ணதாசன் கருத்து
தி.மு.க.,வினர் மனோபாவம் எப்படி என்பதை, அந்த கட்சியில் நீண்ட காலம் இருந்து, கருணாநிதியோடு நெஞ்சுக்கு நெருக்கமாகப் பழகி நட்பு பூண்டு, பிறகு வெளியே வந்த கண்ணதாசன் ஒரு மேடையில் அழகாகச் சொன்னார். தி.மு.க.,வில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
பேசிப் பழகிய பொய், -வாங்கிப் பழகிய கை,- போட்டுப் பழகிய பை!
இது தான் தி.மு.க.,வில் உள்ளவர்களுடைய இலக்கணம் என்று மூன்று வரிகளில் மிகச் சுருக்கமாக சொன்னார். அதைத்தான் இப்போது சிவா உண்மை என்று நிரூபித்திருக்கிறார்.