வீட்டின் உள்ளே அமைக்கலாம் 'லிப்ட்' ; அது முதியோருக்கு பெரிய 'கிப்ட்'
வீட்டின் உள்ளே அமைக்கலாம் 'லிப்ட்' ; அது முதியோருக்கு பெரிய 'கிப்ட்'
ADDED : ஜூலை 04, 2025 10:22 PM

சிலர் மேஸ்திரி போன்ற அனுபவம் வாய்ந்தவர்களை வைத்து வீடு கட்டுகிறார்களே. வீடு கட்ட இன்ஜினியர் அவசியமா? தக்க ஆலோசனை கூறவும்.
-பாலு, கோவைப்புதுார்.
ஆம். நிச்சயமாக வீடு கட்ட இன்ஜினியர் அவசியமாக தேவைப்படுகிறார். காரணம் இன்ஜினியரால் மட்டுமே மண் பரிசோதனை, ஸ்ட்ரக்சுரல் டிசைன், கட்டடத்தின் மதிப்பீடு மற்றும் வேலை ஆட்களை வழிநடத்துதல் போன்ற அனைத்தையும் சிறந்த முறையில் செய்து தர முடியும்.
மொட்டை மாடியில் கான்கிரீட் மீது அப்படியே 'கூலிங் டைல்ஸ்' ஒட்டலாமா?
-மாதவன், வாளையார்.
நிச்சயமாக ஒட்டக்கூடாது. கண்டிப்பாக குருணை ஜல்லி கொண்டு சுருக்கி தளம் அமைத்து, சரியான முறையில் 'வாட்டர் புரூப்பிங்' செய்து, அதன் மீதுதான் கூலிங் டைல்ஸ் ஒட்ட வேண்டும். கூலிங் டைல்ஸ் ஒட்டும் பொழுது மூன்று எம்.எம்., இடைவெளி விட்டு ஒட்டி, அதில் எப்பாக்ஷி கெமிக்கல் கொண்டு சரியான முறையில் பில்லிங் செய்ய வேண்டும்.
எஸ்.டி.பி., என்றால் என்ன? நாம் கட்டும் கட்டடங்களுக்கு எஸ்.டி.பி., அவசியமா?
-லோகநாதன், போத்தனுார்.
எஸ்.டி.பி., என்பது, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பாகும். இது கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறது. இதனால், நிலத்தடி நீர் மாசுபடாமல் தடை செய்யப்படுகிறது. இந்நீரை கார்டன் போன்றவற்றிற்கு உபயோகிப்பதால், தண்ணீர் தட்டுப்பாடு தடுக்கப்படுகிறது.
கைப்பிடி சுவர் எத்தனை 'இன்ச்' அகலத்தில் கட்ட வேண்டும்.
-மோகன், ஆலாந்துறை.
கைப்பிடி சுவரானது, 9 இன்ச் அகலத்தில் குறைந்தபட்சம் மூன்று அடி உயரத்தில் கட்ட வேண்டும். 4.5 இன்ச் அகலத்தில் கட்டக்கூடாது. 4.5 இன்ச் அகலத்தில் கட்டும்போது, பெயின்டர் தொங்கு சாரம் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருக்காது.
மொட்டை மாடியில் மழை நீர் வெளியேறும் குழாய் ஒன்று அமைத்தால் போதுமா?
-சுந்தரம், சுகுணாபுரம்.
மொட்டை மாடியில் மழை நீர் வெளியேறும் குழாய், 300 சதுரடிக்கு ஒன்று வீதம் எத்தனை சதுரடிகள் உள்ளதோ, அதற்கேற்ப, 4 இன்ச் பைப் வாயிலாக அமைக்க வேண்டும்.
ஏற்கனவே கட்டப்பட்ட எங்கள் வீட்டில் வீட்டு பெரியவர்கள் முதல் தளம் செல்ல 'ஹோம் லிப்ட்' அமைக்கலாமா? மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து விளக்கவும்.
-சந்தோஷ், ராசிபாளையம்.
தாராளமாக அமைக்கலாம். தகுந்த பொறியாளரின் ஆலோசனையுடன் ஏற்கனவே உள்ள ரூப் ஸ்லாபை பாதுகாப்பாக, நவீன கட்டிங் இயந்திரம் கொண்டு, 'ஸ்லாப் கட்டிங்' செய்து, வீட்டு லிப்ட் அமைக்கலாம்.
இருவர் முதல் ஆறு பேர் வரை பயணிக்கக்கூடிய அளவில், வீல் சேர் இடவசதியுடன், தகுந்த பாதுகாப்பு அமைப்புகளுடன், ஹைட்ராலிக் ஹோம் லிப்ட்கள் கிடைக்கின்றன. ஆட்டோமேட்டிக் கதவு, புளோரிங் மற்றும் சீலிங் போன்றவற்றிற்கு நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களைப் பொறுத்து, லிப்ட் விலை மாறும்.
-ரவி,
பொருளாளர்,
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா).