வங்க கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்க கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
ADDED : அக் 20, 2024 07:42 AM
சென்னை: மத்திய அந்தமான் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல சுழற்சியால், வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
மத்திய அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள வளி மண்டல சுழற்சி, கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ., வரை நீண்டுள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல் பகுதியில், நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 23ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் ஏழு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், பெரம்பலுார் மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.