ADDED : பிப் 14, 2026 06:24 AM

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நாளை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடலில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது.
எனினும், தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இன்று முதல் வரும் 17 வரை வறண்ட வானிலை காணப்படும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், நீலகிரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இன்று அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில், அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

