மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க நவீன சமையல்கூடம்
மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க நவீன சமையல்கூடம்
ADDED : செப் 26, 2024 08:04 AM
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிரசாதம் தயாரிக்க நவீன சமையல் கூடம் அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இதற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
மீனாட்சி அம்மன் கோயிலில் தற்போது பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. தவிர புளியோதரை, முறுக்கு, அப்பம், புட்டு போன்ற பிரசாதங்கள் விற்கப்படுகின்றன. இவை கோயிலின் ஒரு பகுதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் அம்மன், சுவாமிக்கு படைக்கப்படும் உணவுகள் பாரம்பரிய முறைப்படி அம்மன் சன்னதி எதிரேயுள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் 'விசிட்' செய்தார். அங்கு பிரசாதம் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தை ஆய்வு செய்தவர், இதேபோல் மற்ற கோயில்களிலும் அமைக்க அறிவுறுத்தினார். முதற்கட்டமாக மீனாட்சி அம்மன் கோயிலில் உணவுபாது காப்புத்துறை விதிகள்படி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாவு பிசையும் கருவி உள்ளிட்டவை வாங்கப்பட்டுள்ளன. நவீன சமையல்கூட பணியாளர்களுக்கு அங்கேயே கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட வேண்டும். ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலில் அதற்கான வாய்ப்பு இல்லாததால் சமையல் கூடம் மட்டும் அமைத்துவிட்டு, மேற்கு சித்திரை வீதியில் உள்ள கோயில் தங்கும் விடுதியில் உள்ள கழிப்பறையை பணியாளர்கள் பயன்படுத்த உள்ளனர்.

