'புதிதாக கட்சி துவக்குவோருக்கு தேசிய பார்வை அவசியம்'; லண்டனில் அண்ணாமலை பேச்சு
'புதிதாக கட்சி துவக்குவோருக்கு தேசிய பார்வை அவசியம்'; லண்டனில் அண்ணாமலை பேச்சு
ADDED : அக் 29, 2024 04:38 AM
சென்னை : ''தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அரசு, இரு மொழி தான் வழங்குவோம்; மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர மாட்டோம் என்று கூறுவது அகங்காரம்,'' என, தமிழகபா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., 39 சதவீத ஓட்டுச்சாவடிகளில், முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்தது, பா.ஜ., கூட்டணி, 72 சட்டசபை தொகுதிகளில் 2ம் இடம் பிடித்தது. தபால் ஓட்டுகளிலும், அ.தி.மு.க.,வை தாண்டி பா.ஜ.,வுக்கு ஓட்டு கிடைத்து உள்ளது. பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்க வேண்டும்.
தேசிய கட்சி தான் மாநிலத்தில் இருக்க வேண்டும். அந்த கட்சியால் தான், மாநிலங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும். தமிழகத்தின் பிரச்னைகளை, உலகப் பிரச்னைகளாக பார்க்கிறோம். இதற்கு தேசிய கட்சி தமிழகத்தில் வேண்டும். தமிழகத்தில் பிறக்காத பிரதமர், அந்த மாநிலத்தின் மீது அக்கறை கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 39 தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற்றாலும், மத்தியில் புள்ளியாகவோ, கமாவாகவோ தான் இருக்கும். தமிழக அரசியல்வாதிகளுக்கு, தேசிய பார்வை வர வேண்டும். ஆட்சி யில் இருப்பவர்களுக்கு இரு மொழி கொள்கை மட்டும் தான். புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களும் அதையே பேசுகின்றனர். கடந்த 60 ஆண்டு கட்சியும், அதையே பேசுகிறது. அவர்களுக்கு புரிய வேண்டும், மக்களின் பார்வை மாறிவிட்டது.
புதிதாக கட்சி ஆரம்பிப்போர், தேசிய பார்வையுடன் கட்சி ஆரம்பித்தால், முதல் பாராட்டு எங்களுடையது தான். மாநில கட்சிகள் பின்னோக்கி செல்கின்றன.
ஆட்சியில் உள்ள ஒரு அரசு, இரு மொழி தான் வழங்குவோம்; 3வது மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர மாட்டோம் என்று கூறுகிறது. இது, அகங்காரம். கட்சியை பிடிக்கவில்லை என்றாலும், தலைவர்களை பார்த்து ஓட்டளிக்க வேண்டும். தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

