ADDED : பிப் 05, 2025 02:09 AM
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே திருமண நாளன்று மணமகன் வராத நிலையில் போலீசார் அவரை தேடுகின்றனர்.
பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த கட்டட பணி தொழிலாளிக்கும், இரு மாதங்களுக்கு முன் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.
தொடர்ந்து, பத்திரிகை அச்சடித்து, அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில், திருமணம் செய்ய பிடிக்கவில்லை என, ஜன., 29ல் தொழிலாளி கூறியதால், பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சு நடந்தது. அப்போது, இரு வீட்டாருக்கும் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடத்த ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் மேலப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோவிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, உணவுகள் தயாரான நிலையில் மணப்பெண் வீட்டார் மணமகளுடன் காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் மணமகன் உட்பட அவரது வீட்டார் யாரும் வராததால், திருமண ஆசை காட்டி அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில், தன்னை ஏமாற்றியதாக மணப்பெண் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார்.
பரமக்குடி மகளிர் போலீசார், தலைமறைவான மணமகனை தேடுகின்றனர்.