UPDATED : மார் 20, 2024 03:29 AM
ADDED : மார் 19, 2024 10:16 PM

சென்னை:போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் வியாபாரிகளை கண்காணிக்க, காவல்துறை சார்பில், புதிய செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் புற்றீசல்கள் போல அதிகரித்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது.
எல்.எஸ்.டி., ஸ்டாம்ப், மெத்தம்பெட்டமைன், ஆசிஷ் எனப்படும், கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட போதை பொருட்களும் தாராளமாக புழங்குகின்றன. இதை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி எடுத்து வருகின்றனர்.
ஒரு மாதத்தில் மட்டும், 402 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எனினும், கடத்தல்காரர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்காக, புதிய செயலியை உருவாக்கும் பணி நடக்கிறது.
இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
புதிதாக உருவாக்கப்படும் செயலியில், போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபடும் உள்ளூர்வாசிகள், வெளிநாடு மற்றும் வெளி மாநில நபர்கள் குறித்த வழக்கு விபரம்; சிறையில் உள்ளனரா, ஜாமினில் வெளியே வந்துள்ளனரா என்பது குறித்த அனைத்து விபரங்களும் பதிவேற்றம் செய்யப்படும்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சங்கிலி தொடர், இவர்களின் தொடர்பு எண், எந்த மாதிரியான போதை பொருள் அதிகம் விற்கப்படுகிறது என்பது குறித்த விபரங்களும் பதிவேற்றப்படும். இந்த செயலி வாயிலாக, போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பகுப்பாய்வு செய்து, அதற்கு ஏற்ப போலீசார் முடுக்கி விடப்படுவர். செயலிக்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

