கலைநயப்பொருட்கள் செய்ய பனை ஓலை பிரிக்க புதிய மிஷின்; வேலை வாய்ப்பிற்கு கை கொடுக்கிறது
கலைநயப்பொருட்கள் செய்ய பனை ஓலை பிரிக்க புதிய மிஷின்; வேலை வாய்ப்பிற்கு கை கொடுக்கிறது
ADDED : நவ 01, 2024 04:25 AM

திருப்புல்லாணி : பனை குருத்தோலையில் இருந்து கலைநயமிக்க பொருட்கள் செய்வதற்கு மிஷின் பயன்படுத்தப்படுவதால் வேலை வாய்ப்பிற்கு கை கொடுக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் பனை மரங்கள் உள்ளநிலையில் பனை மரத்தின் குறுத்தோலையிலிருந்து கலைநயமிக்க பொருட்கள் உருவாக்கப்படுகிறது.
சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு திருப்புல்லாணி அருகே தினைக்குளத்தில் இயங்கி வரும் ஸ்ரீ தன்வந்திரி ஆசிரம டிரஸ்ட் சார்பில் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு தையல் பயிற்சி மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருப்புல்லாணி, மண்டபம் ஒன்றியங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இவற்றில் 2000 பெண்கள் தையல் பயிற்சியும், பனை ஓலையில் கலைநய பொருட்கள் தயாரிப்பில் 1500 பெண்களும் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் கூறியதாவது:
பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு திட்டத்தில் 5 பேர் கொண்ட குழுக்களாக 80 மகளிர் குழுக்கள் இயங்கி வருகிறது. முன்பு பனை ஓலையில் இருந்து ஈக்கு மற்றும் ஓலைகளை வாருவதற்கு கைகளால் முழு அளவில் மெனக்கெட வேண்டும்.
தற்போது புதிய கண்டுபிடிப்பாக பனை ஓலையில் இருந்து ஈக்கு மற்றும் ஓலைகளின் நீள அகலங்கள் தனியாக பிரித்து எடுப்பதற்கு இயந்திரம் திருப்பூரில் இருந்து பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அவற்றிலிருந்து பெண்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பூஜை கூடை, தாம்பூலத்தட்டு, வாட்டர் பாட்டில் கூடு, விசிறி, கிலுகிலுப்பை, மாலை உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகளை விரைவாக செய்வதற்கு இம்முறை பயனுள்ளதாக உள்ளது.
இதனால் உற்பத்தி திறன் அதிகரித்து வேலைவாய்ப்பு கிடைக்கிறது. பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட அனைத்து பொருள்களிலும் பூஞ்சைகள் தாக்குதல் மற்றும் சேதமடையாமல் தவிர்ப்பதற்காக புதிய கருவியில் மெழுகு பூச்சு ஸ்பிரே அடிக்கப்படுகிறது.
இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு வகையான கலைநய பொருட்கள் பெங்களூரு, சென்னை, மும்பை, மைசூரு, ஹைதராபாத் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் ஆர்டரின் பெயரில் மொத்தமாக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
பனை மரத்தை அழிவில் இருந்து காப்பாற்றவும் அது குறித்த விழிப்புணர்வை மக்கள் உணர வேண்டும் இதன் மூலம் ஏராளமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொழில் சார்ந்து பயன்பெறுகின்றனர் என்றார்.