ADDED : ஜன 09, 2024 02:44 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலாவதியான பஸ்கள் இயக்கப்படும் நிலையில் படிக்கட்டு இல்லாமல் இயக்கப்பட்ட புதிய மாடல் பஸ் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது.
ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக புறநகர் கிளையில் 58 பஸ்களும், நகர் கிளையில் 65 பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டவுன் பஸ்கள் அனைத்தும் காலாவதியான நிலையில் ஓடுகின்றன.
பழைய பஸ்களுக்கு பெயின்ட் அடித்து அதே ஓட்டை, உடைசலுடன் இயக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு டவுன் பஸ் படியில் தொங்கிய மாணவர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு உடைந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பெரியபட்டினம் பகுதிக்கு 4 -ஏ வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்சில் படிக்கட்டு இல்லாமல் இயக்கப்படுகிறது. இதில் முதியவர்கள், சிறுவர்கள் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர்.
மேலும் படிக்கட்டு இருக்கும் என நினைத்து கால் வைக்கும் பயணிகள் தடுமாறி விழுகின்றனர். அரசு போக்குவரத்துக்கழகம் இதை எல்லாம் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளது.