ADDED : பிப் 19, 2024 04:11 AM

பந்தலுார் : நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், நக்சல் நடமாட்டம் மற்றும் வனவிலங்கு வேட்டைகாரர்கள் குறித்து, போலீசார் தொடர் விசாரணை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, நாடுகாணி பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக வந்த இருவரை, சோதனை சாவடியில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களிடம் துப்பாக்கி தோட்டா இருந்ததும், தேவாலா ஹட்டி பகுதி மணி, 53, சசிகுமார், 39, என்பதும் தெரியவந்தது.
விசாரணையில், 'தமிழக எல்லையை ஒட்டிய, கேரள மாநிலம் மருதா என்ற இடத்தில் இருந்து, 1.25 லட்சம் ரூபாய்க்கு புதிய ரக நாட்டு துப்பாக்கியை வாங்கியதும், அதை வைத்து, வனவிலங்குகளை வேட்டையாடியதும் தெரிந்தது.
மணி வீட்டில் மறைத்து வைத்திருந்த, புதிய ரக நாட்டு துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

