'திருச்செந்துார் கடல் அரிப்பை தடுக்க விரைவில் நிரந்தர தீர்வு'
'திருச்செந்துார் கடல் அரிப்பை தடுக்க விரைவில் நிரந்தர தீர்வு'
ADDED : ஜன 19, 2025 12:52 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் அதிகரித்து வரும் கடல் அரிப்பு பிரச்னையால், பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடல் அரிப்பு தொடர்ந்தால் கோவிலுக்கு ஆபத்து ஏற்படும் என, பல்வேறு அமைப்பினரும் எச்சரித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என, தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நம் நாளிதழும் விரிவான செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக துாத்துக்குடி எம்.பி., கனிமொழி தலைமையில், அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் திருச்செந்துார் கடற்கரை பகுதியில் ஆய்வு நடத்தினர்.
கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., நிபுணர்கள் குழுவினர் உடனிருந்தனர். தொடர்ந்து, கனிமொழி எம்.பி., கூறியதாவது:
கால நிலை மாற்றத்தால் திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மண் அரிப்பு காரணமாக பக்தர்கள் கடலில் புனித நீராட முடியாத நிலை உள்ளது.
கடல் அரிப்பு ஏற்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் வெளியானது.கடல் அரிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அமைச்சர்கள், நிபுணர்கள், அதிகாரிகள் குழுவினருடன் கடற்கரையில் நேரில் ஆய்வு நடத்தினோம்.
கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன், கடற்கரையில் மண் அரிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காண நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்படுகிறது. அதற்கான நிதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார்.
கடற்கரையில் கரை ஒதுங்கும் சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் வரலாற்று சிற்பங்களாக இருந்தால் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுதும் கடல் அரிப்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக கடற்கரையில் அனைத்து இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு இருந்தாலும், அந்த இடங்களில் எல்லாம் நிரந்தர தீர்வு என்பதை எந்த அரசும் ஏற்படுத்த முடியாது.
அதிகளவில் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டறிந்து, எங்கு பாதுகாப்பு செய்ய முடியுமோ, அங்கு நிச்சயமாக முதல்வர் உரிய நடவடிக்கையை எடுப்பார்.
நீண்ட கால பாதுகாப்புக்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க., அரசு கால நிலை மாற்றத்தையும், அதனால் வரக்கூடிய விளைவுகளையும் புரிந்து செயல்படக் கூடிய ஆட்சி.
திருச்செந்துாரில் புறவழிச்சாலை அமைப்பது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.