தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு
ADDED : ஜூலை 25, 2025 10:59 PM
சென்னை:'பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளை , ஒரே துறையின் கீழ் கொண்டு வருவோம்' என்ற, தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை, கூட்டுறவுத் துறையின் கூட்டுறவு சங்கங்களும், உணவுத் துறையின் நுகர்பொருள் வாணிப கழகமும் நடத்துகின்றன.
ரேஷன் பொருட்களை கொள்முதல் செய்து கடைகளுக்கு அனுப்பும் பணியை, வாணிப கழகம் மேற்கொள்கிறது. இதனால், எடை குறைவாக அனுப்பப்படுவதாக, கூட்டுறவு ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இரு துறைகளின் அதிகாரிகள் மட்டுமின்றி, வருவாய், உள்ளாட்சி என, பல துறை அதிகாரிகள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்கின்றனர்.
எனவே, ரேஷன் கடைகளை உள்ளடக்கிய, பொது வினியோக திட்டத்திற்கு, தனி துறையை உருவாக்குமாறு , ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மனு அளித்துள்ளனர்.
இது குறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின், 2021ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது, ரேஷன் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வர, மனு அளிக்கப்பட்டது. அதை ஆட்சிக்கு வந்த, 100 நாட்களுக்குள் செயல்படுத்து வதாக தெரிவித்தார்.
பின், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், வாக்குறுதி எண், 236ல், 'பல துறைகளின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளை ஒரே துறையாக கொண்டு வருவோம்' என, தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், பல முறை வலியுறுத்தியும், வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதை நிறைவேற்ற கோரி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மனு அளிக்கப்பட்டது.
அதை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், உரிய துறைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து, மனுவை வாங்கியதற்கான ரசீதை வழங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.