ராசி இல்லாத பதவியா; பயமூட்டும் பதவியா? ஏழு மாதங்களில் 4வது நிர்வாக இயக்குநர்
ராசி இல்லாத பதவியா; பயமூட்டும் பதவியா? ஏழு மாதங்களில் 4வது நிர்வாக இயக்குநர்
ADDED : அக் 05, 2025 12:55 AM
சென்னை:ரேஷன் துவரம் பருப்பு, பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்யும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, கடந்த ஏழு மாதங்களில், நான்காவது நிர்வாக இயக்குநர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு, பருப்பு கொள்முதல் முறைகேட்டிற்கு துணை போகாததே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை மானிய விலையிலும் வழங்கப்படுகின்றன.
அரிசி, கோதுமையை இந்திய உணவு கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், உணவு துறையின் கீழ் உள்ள நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.
இதை, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான நிர்வாக இயக்குநர் நிர்வாகம் செய்கிறார். கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை, ஏழு மாதங்களில் மட்டும், நான்கு நிர்வாக இயக்குநர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, நிர்வாக இயக்குநராக இருந்த அண்ணாதுரை, கடந்த பிப்ரவரியில் மாற்றப்பட்டு, அம்மாதமே சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
அவர், ஏப்ரல் இறுதியில் விடுப்பில் சென்றதும், வேளாண் துறை இயக்குநரான முருகேஷ், வாணிப கழக நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். பின், கடந்த ஜூலை 14ல் நிர்வாக இயக்குநராக ஜான் லுாயிஸ் பொறுப்பேற்றார்.
அவர், கடந்த 29ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அண்ணாதுரை மீண்டும் நியமிக்கப்பட்டார். இம்மாதம், 3ம் தேதி, புதிய மேலாண் இயக்குநராக பொறுப்பேற்றார்.
துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டரில், சில நிறுவனங்களிடம் இருந்து, வெளிச்சந்தையை விட அதிக விலைக்கு வாங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன. இதற்கு ஒப்புதல் அளிக்காததால் தான், நேர்மையான அதிகாரிகள் மாற்றப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, வாணிப கழக பணியாளர்கள் கூறியதாவது:
உணவு மானியத்திற்காக ஆண்டுக்கு, 10,500 கோடி ரூபாய் அரசு செலவு செய்கிறது. ஏழை மக்களுக்கான உணவு பொருட்களை கொள்முதல் செய்யும் வாணிப கழகத்தில், நிர்வாக இயக்குநரை அடிக்கடி மாற்றியது கிடையாது.
இந்தாண்டில் பிப்., முதல் இதுவரை, நான்கு நிர்வாக இயக்குநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு, பருப்பு கொள்முதல் முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போகாதது தான் முக்கிய காரணம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.