ADDED : பிப் 23, 2024 10:18 PM
சென்னை:வீடு, மனை போன்ற சொத்துக்கள் தொடர்பான பரிமாற்றத்தை பதிவு செய்யும் போது, இரண்டு வகையான வழிகாட்டி மதிப்புகள் இருக்கக்கூடாது என, பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை சொத்துக்கள் தொடர்பான பத்திரங்கள், வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் சார் -- பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு சொத்துக்களை பதிவு செய்யும் போது, வழிகாட்டி மதிப்பை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
புகார்கள்
தமிழகத்தில் சொத்துக்களுக்கு சர்வே எண் வாரியாகவும், தெரு, நகர் அடிப்படையிலும் வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்புகள் பதிவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையிலேயே பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும் என சார் - பதிவாளர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஆனால், பல இடங்களில் வழிகாட்டி மதிப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்த உத்தவு:
ஒரே சொத்துக்கு தெரு அடிப்படையிலும், சர்வே எண் அடிப்படையிலும் என இரண்டு வகை வழிகாட்டி மதிப்புகள் இருக்கக்கூடாது. இது, பதிவுத்துறையின் வெளிப்படை தன்மைக்கு முரணாக அமை யும் என தெரிய வருகிறது.
எனவே, தற்போது வரை நிர்ணயிக்கப்பட்ட மனை மதிப்புகளை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அதையே கடைப்பிடிக்க வேண்டும்.
நகர்கள், தெருக்களுக்கு மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு உட்பட்ட சர்வே எண்களுக்கு, தனியான வழிகாட்டி மதிப்புகளும் இணையதளத்தில் காணப்படுகின்றன. இது தவறான நடைமுறை.
நகர் மற்றும் தெருக்களுக்கு மட்டுமே வழிகாட்டி மதிப்புகள் இருக்க வேண்டும். இந்த இடத்தில் சர்வே எண்களுக்கு வேறு வகையான தனி வழிகாட்டி மதிப்புகள் இருக்கக் கூடாது. இவ்வாறு மதிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தால், அவற்றை நீக்க வேண்டும்.
வெளிப்படை
அந்த இடங்களில், 'நகர், தெரு மதிப்பை காண்க...' என்று குறிப்பிட வேண்டும். இந்த முரண்பாடுகளை களைந்து, சொத்துக்களுக்கு உரிய வழிகாட்டி மதிப்புகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
இதுகுறித்த பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது குறித்த அறிக்கையை, சார் - பதிவாளர்களிடம் இருந்து பெற்று, 15 நாட்களுக்குள் தணிக்கை பணிக்கான மாவட்ட பதிவாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
மாவட்ட பதிவாளர்கள், டி.ஐ.ஜி.,க்கள் புதிய மதிப்புகளை நிர்ணயிக்கும் போதும், இந்த வழிமுறையை கருத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.