போலீசார் மீதான விசாரணை விரைந்து முடிக்க வேண்டுகோள்
போலீசார் மீதான விசாரணை விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : ஜன 18, 2024 12:48 AM
சென்னை:'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட போலீசாருக்கு, சம்பள பிடித்தம், பதவி உயர்வில் சிக்கல் என, ஏழு விதமான தண்டனைகள் கிடைப்பதால், தங்கள் மீதான குற்றச்சாட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என அவர்கள், வேண்டுகோள் விடுக்கின்றனர்.
'டிஸ்மிஸ்'
லஞ்சம் வாங்குதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் போலீசார், காத்திருப்போர் பட்டியலுக்கு, உடனடியாக மாற்றப்படுவர். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்; வெகு சிலர், பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்.
தவறு செய்த ஒருவருக்கு, இரண்டு தண்டனைகள் வழங்கக் கூடாது என, 'குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவு - 300' கூறுகிறது. ஆனால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதால், ஏழு விதமான தண்டனைகள் கிடைக்கின்றன.
விசாரணை முடிவில், தவறு செய்யவில்லை என, தெரிய வந்தாலும், தண்டனைகளை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்ற சூழல் உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
தவறு செய்யும் போலீசார் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம். ஆனால், புகார் பெறப்பட்டு முதற்கட்ட விசாரணை முடியும் முன்னரே, 'சஸ்பெண்ட்' செய்யப்படுவது ஏற்புடையது அல்ல.
பண பலன்கள் இல்லை
'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாலேயே, ஊதிய உயர்வு, பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலம், ஈட்டிய விடுப்பில் கழிக்கப்படுகிறது. பண பலன்கள் கிடையாது.
சி.பி.சி.ஐ.டி., மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் பணியமர்த்தப்படுவது இல்லை.
லஞ்ச ஒழிப்பு துறை, உளவுத்துறை, நீதிமன்ற கண்காணிப்பு பிரிவுகளுக்கும் நியமிக்கப்படுவது இல்லை.
தண்டனைகள்
வீர தீர செயல் புரிந்து இருந்தாலும், ஜனாதிபதி, முதல்வர் பதக்கப்பட்டியல் பெற பரீசிலனைக்கு அனுப்புவது இல்லை. விருப்ப ஓய்வில் செல்லவும், அனுமதி அளிப்பது இல்லை.
இது போன்ற தண்டனைகளில் இருந்து விடுவிக்க, எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விரைந்து விசாரிக்க வேண்டும்.
குற்றம் நிரூபணமானால், 'சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ்' உத்தரவுகளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஆண்டுக்கணக்கில் விசாரணையை முடிக்காமல் தண்டனைகள் வழங்குவதை, அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.