ADDED : அக் 22, 2025 03:15 AM

சென்னை: சென்னை அருகில் உள்ள தொழில் பூங்காக்களில் செயல்படும் பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் அடங்கிய காட்சியகத்தை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்க உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஒரகடத்தில், 'சிப்காட்' நிறுவனத்துக்கு தொழில் பூங்காக்கள் உள்ளன. அங்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல தொழில் நிறுவனங்கள் ஆலைகள் அமைத்துள்ளன.
அவற்றில் கார், வர்த்தக வாகனம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மருத்துவ சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த பொருட்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையில், இருங்காட்டுக்கோட்டை தொழில் பூங்கா வளாகத்தில், 5 கோடி ரூபாய் செலவில், தயாரிப்பு பொருட்கள் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான திட்ட வரைபடம், மதிப்பீடு தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் காட்சியக கட்டுமான பணிக்கு, 'டெண்டர்' கோரப்பட உள்ளது.
இதன் வாயிலாக, சென்னைக்கு அருகில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, சர்வதேச நிறுவனங்கள் ஒரே இடத்தில் பார்க்க முடியும்.