கூட்டுறவு கடன் தீர்வு திட்டம் வரும் 2ம் தேதி சிறப்பு முகாம்
கூட்டுறவு கடன் தீர்வு திட்டம் வரும் 2ம் தேதி சிறப்பு முகாம்
ADDED : பிப் 27, 2024 11:26 PM
சென்னை:'கூட்டுறவு நிறுவனங்களில், நிலுவையில் உள்ள நீண்ட கால கடன்களை வசூலிக்கும் சிறப்பு கடன் தீர்வு திட்டத்திற்கான சிறப்பு முகாம், மார்ச், 2ம் தேதி நடக்கிறது' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியுள்ளதாவது:
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள், பொது மக்களுக்கு பல்வேறு கடன்களை வழங்குகின்றன.
தவணை தவறிய நீண்ட கால நிலுவை கடன்களை வசூலிக்க, சிறப்பு கடன் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள கடன்களுக்கு, அசலுக்கு 9 சதவீதம் சாதாரண வட்டி வசூலிக்கப்படும். கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவு தள்ளுபடி செய்யப்படும்.
சிறப்பு திட்டத்தின் வாயிலாக, 2.61 லட்சம் கடன்கள் கண்டறியப்பட்டு, 2.13 லட்சம் கடன்தாரர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. அதில், 3,438 கடன்தாரர்கள் ஒப்பந்தம் செய்ததில், 9 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு கணக்கு முடிக்கப்பட்டது.
சிறப்பு கடன் தீர்வு திட்டத்தின் பயனை, கடன்தாரர்கள் முழுதுமாக பெறும் நோக்கில், மார்ச் 2ம் தேதி வங்கிகள், சங்கங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
அம்மாதம், 13ம் தேதிக்குள் கடன்தாரர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகள், சங்கங்களை தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

