சமூக ஊடகங்களை கண்காணிக்க ஸ்டேஷன் அளவில் ஒரு போலீஸ்
சமூக ஊடகங்களை கண்காணிக்க ஸ்டேஷன் அளவில் ஒரு போலீஸ்
ADDED : மார் 25, 2024 03:30 AM

சிங்கம்புணரி : தமிழகத்தில் சமூக ஊடக பிரபலங்களை கண்காணிக்க ஸ்டேஷன் அளவில் ஒரு போலீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் தீவிரம் அடைந்து பிரசாரம் துவங்கிய நிலையில் சமூக ஊடகங்களில் காரசார விவாதம் துவங்கியுள்ளது. ஒரு பக்கம் ஆதரவு பிரசாரம், மறுபக்கம் எதிர்ப்பு கோஷம் மட்டுமின்றி, பழைய செய்திகளை தோண்டி எடுத்து பிரசாரம், அவதுாறு, தவறான செய்திகள் என பரப்பப்பட்டு வருகின்றன.
கட்சிகளில் குறிப்பிட்ட சிலர் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்து கொண்டு எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். பல போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் வந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நேரம் என்பதால் சமூக ஊடக பதிவுகளால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஒரு போலீஸ் இதற்காக தனியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த சரகத்திற்கு உட்பட்ட அனைத்து கட்சி சமூக ஊடக பிரபலங்களை குறிப்பாக அரசியல் சார்ந்து பதிவிடுபவர்களை கண்காணிக்க வேண்டும். பிரச்னை ஏதும் பெரிதாக உருவாகி விடாமல் அவர்களே அதை சமாளித்து முடித்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிடும் பிரபலங்களின் பெயர் பட்டியலுடன் போலீசார் விசாரணை துவங்கியுள்ளனர்.

