பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் விபரம் தந்தது சுவிஸ் நிறுவனம்
பள்ளிகளுக்கு குண்டு மிரட்டல் விபரம் தந்தது சுவிஸ் நிறுவனம்
ADDED : மார் 07, 2024 11:57 AM
சென்னை:தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட, ஐ.பி., அட்ரஸ் உள்ளிட்ட விபரங்களை, சுவிட்சர்லாந்து நாட்டு நிறுவனம் வழங்கி இருப்பதாக, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:
சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும், பிரபல தனியார் பள்ளிகளுக்கு, 'இ - மெயில்' வாயிலாக, 26 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், 19 முறை ஒரே மெயிலில் இருந்து மிரட்டல் வந்தது.
சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும், புரோட்டான் என்ற நிறுவனத்தின், இ - மெயில் சேவையை பயன்படுத்தி மிரட்டல் மெயில் அனுப்பப்பட்டு இருந்தது.
அதனால், மிரட்டல் விடுக்க இணையத்தை பயன்படுத்தும் பயனர் முகவரியான, ஐ.பி., அட்ரஸ் உள்ளிட்ட விபரங்களை தர வேண்டும் என, புரோட்டான் நிறுவனத்திற்கு முறைப்படி கடிதம் அனுப்பினோம்; அந்நிறுவனம் தர மறுத்தது.
இதனால், மத்திய அரசு வாயிலாக, அந்நிறுவனம் நம் நாட்டில் சேவையை வழங்க முடியாதபடி முடக்கும் பணியில் ஈடுபட்டோம்.
தற்போது அந்த நிறுவனம், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட கணினி மற்றும் ஐ.பி., அட்ரஸ் உள்ளிட்ட விபரங்களை வழங்கி உள்ளது. குற்றவாளி விரைவில் சிக்குவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

