தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வரத்து
ADDED : நவ 04, 2024 03:38 AM

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு - கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது.
இதன்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, ஆண்டுதோறும் இருமுறை, 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீரை, அம்மாநில அரசு தர வேண்டும்.
இந்தாண்டு செப்டம்பர், 19ல் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், சாய்கங்கை கால்வாய் வழியாக, 152 கி.மீ., துாரம் பயணித்து, 23ம் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டையும், மறுநாள் காலை பூண்டி நீர்த்தேக்கத்தையும் வந்தடைந்தது.
நேற்று மதியம், 1:00 மணியளவில் வினாடிக்கு, 325 கன அடி நீர்வரத்து இருந்தது. இதுவரை, ஒரு டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துஉள்ளது.
பூண்டி நிலவரம்: நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் வினாடிக்கு, 295 கன அடி, மழைநீர், 120 கன அடி என மொத்தம் 415 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில் தற்போது, 0.505 டி.எம்.சி., நீர் உள்ளது. மொத்த நீர்மட்டமான, 35 அடியில், 22.42 அடி நீர் உள்ளது.
இங்குள்ள இணைப்பு கால்வாய் வாயிலாக வினாடிக்கு, 350 கன அடி நீர் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திற்கு திறக்கப்பட்டு உள்ளது. பேபி கால்வாய் வாயிலாக, 17 கன அடி நீர் திறக்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.