மாற்றுதிறனாளிகளுக்கான வசதிகள் கோவில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
மாற்றுதிறனாளிகளுக்கான வசதிகள் கோவில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை
ADDED : மார் 18, 2024 06:48 AM

சென்னை: 'கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டது குறித்த விபர அறிக்கையை, வரும், 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
'இல்லையெனில், சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீராய்வு கூட்டம்
அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர்களுக்கும், கோவில் செயல் அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதம்:
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 2020ம் ஆண்டு, 200 சுற்றுலா தலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.
அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 74 ஹிந்து கோவில்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை, கோவில் நிதியில் மேற்கொள்ளவும், பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.
தேவையான வசதிகள் செய்யப்பட்ட விபர அறிக்கை, முதுநிலை அல்லாத கோவில்கள், மண்டல இணை ஆணையர் வழியாகவும், முதுநிலை கோவில்கள் நேரடியாகவும், கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், அறிக்கைகள் இதுவரை வரவில்லை. இந்த செயல்பாடு ஏற்புடையதல்ல; கண்டனத்துக்கு உரியது. எனவே, 74 கோவில்களில் எடுக்கப்பட்டுள்ள, மறு சீரமைப்புகள் தொடர்பாக, தலைமை செயலர் தலைமையில், சீராய்வு கூட்டம் நடக்க உள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை
எனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்ட விபர அறிக்கையை, வரும் 21ம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவும். இது மிகவும் அவசரம்.
தவறினால், தொடர்புடைய கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இப்பணியை கண்காணிக்க தவறிய, இணை ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

