ஒரு பெண் சுதந்திரமாக துப்பட்டா அணிய முடியவில்லை: தமிழிசை
ஒரு பெண் சுதந்திரமாக துப்பட்டா அணிய முடியவில்லை: தமிழிசை
ADDED : ஜன 07, 2025 07:40 PM
கோவை:''தமிழகத்தில், ஒரு பெண் சுதந்திரமாக துப்பட்டா போட்டு செல்ல முடியவில்லை. அப்படி என்றால், இங்கே என்ன ஆட்சி நடக்கிறது?'' என, கேள்வி எழுப்பினார் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை.
அவர் அளித்த பேட்டி:
எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு எப்போதும் அனுமதி கிடைப்பதில்லை. தி.மு.க., ஆர்ப்பாட்டம் என்றால் உடனே அனுமதிக்கின்றனர். தி.மு.க., ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி. முடிந்து போன டங்ஸ்டன் பிரச்னைக்கு, வைகோ ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதித்துள்ளனர்.
தேசிய கீதத்தை உதாசீனப்படுத்தியதற்கு, கவர்னர் கண்டனம் தெரிவித்ததால், அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதிக்கின்றனர். தி.மு.க., ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுமா?
தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் பிரச்னையை மறைக்க ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இது கண்டிககத்தக்கது. முதல்வர் வரம்பு மீறி, கவர்னரை பற்றி ட்விட் போடுகிறார். அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க, இதுவரை தி.மு.க., தரப்பில் யாரும் வாய் திறக்கவில்லை. ஏற்கனவே விசாரணை நடக்கிறதே, அப்புறம் ஏன் போராட்டம் என கேட்கிறார் கனிமொழி.
அப்படியானால், கவர்னர்தான் பதில் சொல்லி விட்டாரே. பின் எதற்கு, தி.மு.க., போராட்டம்?
பொங்கல் தொகுப்புடன் அளிக்கப்படும் பணம் எங்கே? தேர்தலுக்குள் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என நினைத்து செயல்படுகின்றனர். தேர்தலில் பெரிய அடி கிடைக்கப் போகிறது.
தமிழகத்தில், ஒரு பெண் சுதந்திரமாக துப்பட்டா போட்டு செல்ல முடியவில்லை. அப்படி என்றால், இங்கே என்ன ஆட்சி நடக்கிறது?
கவர்னரை, மக்களை, எதிர்க்கட்சிகளை, பெண்கள் அணியும் கருப்பு துப்பட்டாவை என எதைப் பார்த்தாலும் தி.மு.க., அஞ்சுகிறது. தி.மு.க., மட்டுமல்ல; கூட்டணியே வெலவெலத்து போய் உள்ளது.
அண்ணா பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஞானசேகரன் குறிப்பிட்ட சார் என கேட்டால் பதில் இல்லை. ஆனால், தி.மு.க., ஆட்சியால் பாதிக்கப்பட்ட ஆவேசத்தில், முதல்வர் படத்தில் செருப்பு வீசிய பாட்டி மீது எப்.ஐ.ஆர்., போட்டு தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ். இது தான், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் லட்சணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

