இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காத பெண்ணுக்கு ரூ.200 அபராதம்
இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காத பெண்ணுக்கு ரூ.200 அபராதம்
ADDED : அக் 29, 2024 06:19 AM

பல்லடம்: இலவச பஸ்சில் டிக்கெட் வாங்காமல் இருந்த பெண்ணுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் - புளியம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ், நேற்று காலை, பல்லடம் நோக்கி வந்தது. தெற்குபாளையம் பிரிவில், ஒரு பெண் பஸ்சில் ஏறினார். அவர் டிக்கெட் வாங்கவில்லை. பஸ் ஸ்டாண்டில் இறங்கிய போது, அவர் டிக்கெட் வாங்காதது குறித்து, டிக்கெட் பரிசோதகர் அப்பெண்ணிடம் கேட்டார்.
இதற்கு, 'ஆண்கள் பகுதியிலேயே நடத்துனர் இருந்ததால், டிக்கெட் எடுப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட் வந்துவிட்டது' என்றார். ஏற்க மறுத்த பரிசோதகர், 200 ரூபாய் அபராதம் விதித்தார்.
'ரொக்கமாக பணம் இல்லை' என அப்பெண் கூறியதை அடுத்து, நடத்துனரின் 'ஜி பே' எண்ணுக்கு தொகை அனுப்ப பரிசோதகர் கூறியுள்ளார். இதையடுத்து, 200 ரூபாயை அனுப்பிய அப்பெண், அங்கிருந்து சென்றார்.
டிக்கெட் பரிசோதகர் செந்தில்வேலனிடம் கேட்டதற்கு, ''பெண்களுக்கு இலவச பயணம் என்றாலும், டிக்கெட் வாங்க வேண்டியது அவசியம். டிக்கெட் வாங்காமல், மொபைல் போனில் அவர் 'பிஸி'யாக இருந்துள்ளார். பஸ் ஸ்டாண்டில் இறங்கியபோது, விதிமுறைப்படி அபராதம் விதிக்கப்பட்டது.
''பணத்தை 'ஜிபே' மூலம் நடத்துனருக்கு செலுத்திய அப்பெண், ரசீது பெறாமல் அங்கிருந்து கிளம்பினார். நடத்துனர் வசூலித்த, 200 ரூபாய் அபராதம் உடனடியாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. நடத்துனரிடம் அபராதம் வசூலித்ததற்கான ரசீது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.