கட்சிக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா செயல்பாடு: திருமாவளவன் பேட்டி
கட்சிக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா செயல்பாடு: திருமாவளவன் பேட்டி
ADDED : டிச 08, 2024 10:58 AM

மதுரை: 'ஆதவ் அர்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். நேற்று முன்னணி தோழர்களுடன் கலந்து பேசினோம். தொடர்பான முடிவு விரைவில் வரும்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சி மதசார்பற்ற கூட்டணி. தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் வி.சி.க., இடம் பெற்றுள்ளது. புதிதாக ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டிய தேவை இல்லை. தி.மு.க., கூட்டணி கட்டுப்பாடு இல்லாமல் சிதறடிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளுக்கும் உள்ள சதி திட்டமாக இருக்கும்.
தலித் அல்லாதவர்களை பாதுகாக்க வேண்டியது கட்சியின் அடிப்படை விதி. துணை பொதுச்செயலாளர்கள் பத்து பேரில் ஒருவர் ஆதவ் அர்ஜூனா. ஆதவ் அர்ஜூனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை, கட்சி முன்னணி தோழர்கள் உணர்ந்து இருக்கிறார்கள் அதை தலைமை கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
நடவடிக்கை
கட்சி, கட்டுப்பாட்டை மீறும் போது, கட்சிக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும் போது உயர்நிலைக் குழுவில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று இது குறித்து பேசியுள்ளோம். ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்.
வி.சி.க., குறி வைக்கப்படுகிறது என்பதை விட தி.மு.க., கூட்டணி குறிவைக்கப்படுகிறது. தி.மு.க., கூட்டணியின் கட்டுக்கோப்பை சீர்குலைக்க வேண்டும் என்பதற்கான சதியாக இருக்கும். தி.மு.க., அழுத்தம் தருகிறது எனில் ஆரம்பத்திலேயே விழாவில் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன். என்னை கட்டுப்படுத்தி இயக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை அதற்கான சூழல் இல்லை.
அரசியல் எதிரி
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என்பது சுயமாக எடுத்த முடிவு. தி.மு.க.,வோ, வேறு யாரோ எந்த அழுத்தமும் எள்முனை அளவு கூட தரவில்லை. தி.மு.க.,வை அரசியல் எதிரி என வெளிப்படையாக விஜய் அறிவித்த பிறகு அந்த மேடையில் கலந்து கொள்ள முடியாது.
நானும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் அதை வைத்து அரசியல் சூதாட்டம் நடத்த சதி வாய்ப்புள்ளது. விஜய் மீதோ, அவரோடு நிற்பதிலோ எனக்கு எந்த சங்கடமும் இல்லை. அவர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. புதியதாக அமையும் கூட்டணியில் வி.சி.க., இடம் பெறாது. புதிய கூட்டணியில் வி.சி.க., இடம் பெற வேண்டிய தேவையும் எழவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.