ஆதவ் அர்ஜூனாவை புத்தக விழாவுக்கு அனுப்பியதே நான்தான்; சொல்கிறார் திருமாவளவன்
ஆதவ் அர்ஜூனாவை புத்தக விழாவுக்கு அனுப்பியதே நான்தான்; சொல்கிறார் திருமாவளவன்
ADDED : டிச 08, 2024 08:33 PM

சென்னை: சென்னையில், அம்பேத்கர் புத்தக வெளியீடு நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனாவை பங்கேற்க சொன்னதே நான் தான் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி: நீங்கள் இல்லாமல் நாங்கள் பங்கேற்கலாமா என்று என்னிடம் அவர் (ஆதவ் அர்ஜூனா) கேட்டார். என்னுடைய அனுமதி இல்லாமல் அவர் போகவில்லை. போகவேண்டாம் என்று சொல்வது ஜனநாயகம் இல்லை.
கட்சியில் ஜனநாயக முறையாக தான் முடிவுகளை எடுத்து வருகிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அணுகுமுறை உண்டு. மற்ற கட்சிகளை போல விடுதலை சிறுத்தைகளும் முடிவு எடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
தொடக்கத்தில் எங்கள் கட்சி ஒரு தலித் இயக்கம் என்ற அடையாளத்துடன் பொதுப்பணியில் ஈடுபட்டது. அரசியல் இயக்கமாக மாற எடுத்துக் கொண்ட முயற்சியின் போது தலித் அல்லாதவர்கள், ஜனநாயக சக்தியினர் வந்து சேரலாம். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து அமைப்பினரும் எங்கள் கட்சியில் அங்கம் வகிக்க இடம் உண்டு என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறோம். இதை வேளச்சேரி தீர்மானம் என்றே எங்கள் கட்சியில் நாங்கள் அழைக்கிறோம்.
அதில் இருந்து ஏராளமான ஜனநாயக சக்தியில் இருப்பவர்கள் எங்கள் இயக்கத்தில் இணைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள். அந்த வகையில் ஆதவ் அர்ஜூனாவும் ஒருவர். எங்கள் கட்சியில் துணை பொதுச் செயலாளர்கள் பொறுப்பு 10 பேருக்கு உள்ளது. அதில் தலித் அல்லாதவர்களும் உண்டு. தலித் அல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக் குழுவில் கலந்தாய்வு செய்து பரிசீலித்து தான் எடுப்போம். இதை ஒரு நடைமுறையாகவே கொண்டிருக்கிறோம்.
கட்சி தேர்தலில் வருவதற்கு முன்பே மத்திய கமிட்டி மூலமாக உறுப்பினர்களை நீக்குவோம். இன்றைக்கும் கட்சியின் துணை விதிகள் அப்படித்தான் இருக்கிறது. ஆகவே துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்பு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்குகிற போது, அதில் தலித் அல்லாதவர்களை நீக்க வேண்டும் என்றால் ஒரு முறைக்கு இருமுறை யோசித்தே முடிவு எடுப்போம். அது எங்கள் கட்சிக்கு உள்ள நடைமுறை.
நாங்கள் பேசி இருக்கிறோம், முடிவை அறிவிப்போம். ஆதவ் அர்ஜூனா கட்சியில் தான் இருக்கிறார். தொடர்பில், பொறுப்பில் தான் இருக்கிறார்.
ஆனந்த் டெல்டும்டே அம்பேத்கரின் பேத்தியின் கணவர். அவர் சட்டப்பூர்வமாக தான் அனுமதி பெற்று தமிழகத்துக்கு வந்தார். அவரை மஹாராஷ்டிராவில் பல நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள். அவரை மேலும் தீவிரவாத முத்திரை குத்தி அந்நியப்படுத்த முயற்சிப்பது அநாகரிக அரசியல்.
அவர்களுக்கு (எதிரணி) திருமாவளவன் குறியில்லை, விடுதலை சிறுத்தைகள் குறி அல்ல. தி.மு.க.,வும், அதன் தலைமையிலான கூட்டணியும் தான் டார்கெட். 3 பொதுத்தேர்தலில் இந்த கூட்டணி கட்டுக்கோப்பாக இருந்து மக்கள் செல்வாக்கோடு வெற்றியை பெற்றிருக்கிறது. இதை அவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
வரும் தேர்தலில் எப்படியாவது இந்த கூட்டணியை சிதறடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். அதற்காக விடுதலை சிறுத்தைகளை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கு நாங்கள் ஒரு போதும் இடம் தர மாட்டோம். தி.மு.க., கூட்டணியிலும், இண்டியா கூட்டணியிலும் அங்கம் வகிக்கிறோம். எனவே எங்களுக்கு இனி ஒரு அணி என்ற சிந்தனையோ, தேவையோ இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.