UPDATED : அக் 18, 2026 05:59 PM
ADDED : அக் 18, 2026 05:55 PM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளது. இந்த நிறுவனம் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற் பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்து அதை பதப்படுத்தி, குளிரூட்டி புதுக்கோட்டை மாவட்ட மக்கள், வியாபாரிகள் தேவைக்கு மட்டுமின்றி சென்னைக்கும் அனுப்பி வருகிறது.
ஆவின் நிறுவனத்தின் சார்பில் பால்கோவா உள்ளிட்ட இனிப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆவின் நிறுவனத்திடம் இருந்து மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் பால் பாக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி கடைகள், பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பால் வினியோகம் செய்ய முடியாமல் முகவர்கள் தவித்து வருகின்றனர். கடைகளில் ஆவின் பால் கிடைக்காததால், கூடுதல் விலை கொடுத்து, தனியார் பால் பாக்கெட்டுகளை மக்கள் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
நவரத்திரி, ஆயூதபூஜை ஆகிய பண்டிகை காலங்களில் பால் தட்டுப்பாட்டை போக்க ஆவின் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
