பால் உற்பத்தியாளர்களுக்கு 'ஆவின் வெற்றி விருதுகள்'
பால் உற்பத்தியாளர்களுக்கு 'ஆவின் வெற்றி விருதுகள்'
ADDED : செப் 03, 2026 01:07 AM

''ஒ வ்வோர் ஒன்றியத்திலும், சிறப்பாக செயல்படும், மூன்று பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்க செயலர்கள் தேர்வு செய்யப்பட்டு, 'ஆவின் வெற்றி விருதுகள்' மற்றும் பரிசுகள் வழங்கப்படும்,'' என, பால் வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
ஜெர்சி கலப்பின கன்றுகளில், பால் உற்பத்தி திறனை மேம்படுத்த, விஞ்ஞானப்பூர்வமான கன்று வளர்ப்பு மற்றும் இனவிருத்தி மேலாண்மைப் பணிகள், 10 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும்
அம்பத்துார் பால் பண்ணை 2 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
ஒவ்வோர் ஒன்றியத்திலும், சிறப்பாக செயல்படும், மூன்று பால் உற்பத்தியாளர்கள் மற்றும் மகளிர் பால் உற்பத்தியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சங்க செயலர்கள் தேர்வு செய்யப்பட்டு, 'ஆவின் வெற்றி விருதுகள்' மற்றும் பரிசுகள் வழங்கப்படும்
வேலுார், ஈரோடு, சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில், 5.18 கோடி ரூபாய் மதிப்பில், 112 சிறந்த மரபியல் திறனுள்ள, கலப்பின ஜெர்சி பொலிகாளை கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, பண்ணைகளுக்கு வழங்கப்படும்
நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், வணிக உரிமம் முறையில், 10 புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்
அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், வணிக உரிம முறையில், புதிய பாலகங்கள் அமைக்கப்படும்
பால் உற்பத்தியாளர்களுக்கு, விபத்து இறப்பு இழப்பீடு, 4 லட்சம் ரூபாய், 5 லட்சம் ரூபாயாகவும், இரண்டு உறுப்புகளை இழந்தவர்களுக்கான இழப்பீடு 2.50 லட்சம் ரூபாயாகவும், பெண் குழந்தைகளின் திருமண உதவித்தொகை, ஒரு லட்சம் ரூபாயாகவும், உயர்த்தி வழங்கப்படும்
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
