பழங்குடியினர் பரிமாற்ற நிகழ்ச்சி வடமாநில இளைஞர்கள் பங்கேற்பு
பழங்குடியினர் பரிமாற்ற நிகழ்ச்சி வடமாநில இளைஞர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 08, 2025 12:19 AM
சென்னை:நேரு யுவகேந்திரா சங்கதன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், சென்னையில் நடக்கும் 16வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது.
அடையாறில் உள்ள இளைஞர் விடுதியில் நடந்த விழாவில், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த, 200 பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்கள், 13ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், தமிழக மற்றும் புதுச்சேரி மாநில இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:
பழங்குடியின இளைஞர்களை, பொருளாதார ரீதியாக உயர்த்த, 2006 முதல், 'பழங்குடியின இளைஞர் பரிமாற்ற' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, 16வது இளைஞர் பரிமாற்ற நிகழ்வு அறிமுக விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த, 200 இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
அவர்கள், 30 குழுக்களாக பிரிக்கப்பட்டு, தீயணைப்பு, முதலுதவி குறித்து கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இன்று கவர்னர் மாளிகையில் நடக்க உள்ள நிகழ்ச்சியில், 16வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சியை, கவர்னர் ரவி துவக்கி வைக்க உள்ளார்.
சென்னை வந்துள்ள வட மாநில இளைஞர்கள், வரும் 13ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.