2 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு செந்தில்பாலாஜி சகோதரர் ஆஜர்; நீதிமன்றம் உத்தரவு
2 ஆண்டு தலைமறைவுக்கு பிறகு செந்தில்பாலாஜி சகோதரர் ஆஜர்; நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஏப் 09, 2025 02:42 PM
ADDED : ஏப் 09, 2025 01:43 PM

சென்னை: 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று (ஏப்.9) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார். ஏப்ரல் 20ம் தேதி ஜாமின் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கி தருவதாக, 1.62 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார் என்பது அவர் மீதான வழக்காகும். இந்த மோசடியில் அவரது சகோதரர் அசோக்குமார், 42, மற்றும் நெருங்கிய கூட்டாளிகள் கார்த்திகேயன், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட பல பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
தொடர் விசாரணையில், மோசடி தொகையில், 1.34 கோடி ரூபாய் செந்தில்பாலாஜி வங்கி கணக்கிலும், 29.55 லட்சம் ரூபாய் அவரது மனைவி மேகலாவின் வங்கி கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, செந்தில் பாலாஜி, அசோக்குமார் ஆகியோர் கூட்டு சேர்ந்து, பினாமிகள் பெயரில் 10.88 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர்.
இதற்கு அசோக்குமார் மனைவி, மாமியார் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டுக்கு பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்படார். தற்போது அவர் ஜாமினில் இருந்தாலும், அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 09) அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 2025ம் ஆண்டு ஜனவரியில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதில செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் ஏப்.9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அசோக்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று (ஏப்.9) தமது வக்கீலுடன் ஆஜரானார்.
அப்போது, 'செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன' என அமலாக்கத்துறை தெரிவித்தது. இதையடுத்து, 'ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர்' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, 'ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்தனர் என்கிற தரவுகளை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும்' என அமலாக்கத்துறை தெரிவித்தது. பின்னர் ' குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ஏப்ரல் 20ம் தேதி ஜாமின் உத்தரவாத தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.