ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் முறைகேடு? தலைமை செயலர் கண்காணிக்க ஐகோர்ட் உத்தரவு
ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் முறைகேடு? தலைமை செயலர் கண்காணிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 08, 2025 10:25 PM
சென்னை:தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகளில், சமீப காலமாக முறைகேடுகள் நடப்பதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் செயல்பாடுகளை கண்காணித்து, அதை சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என, தமிழக தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில், பேராசிரியர் எஸ்.ஏ., கல்வியியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரி, பல்கலை இணைப்பு வழங்கக் கோரி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையிடம் விண்ணப்பம் செய்திருந்தது.
இதையடுத்து, கல்லுாரியை ஆய்வு செய்த பல்கலை குழு, பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி அறிக்கை அளித்தது.
அதை ஏற்று, கல்லுாரிக்கு இணைப்பு வழங்க மறுத்து, அது தொடர்பான விண்ணப்பத்தை நிராகரித்து, பல்கலை உத்தரவிட்டது. இதை எதிர்த்து, கல்லுாரி நிர்வாகம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பல்கலை உத்தரவில் தலையிட முடியாது எனக்கூறி, கல்லுாரி நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, கல்லுாரி நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லுாரி நிர்வாகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜரானார்.
பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த பல்கலையின் நடத்தை, ஆச்சரியம் அளிக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகளில், சமீப காலமாக இதுபோன்ற முறைகேடான செயல்கள் நடப்பதை காண முடிகிறது.
எனவே, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் செயல்பாடுகளை கண்காணித்து, அதை சீர்திருத்துவதற்கான ஆலோசனைகளை தமிழக தலைமை செயலர் வழங்க வேண்டும்.
கல்லுாரி நிர்வாகம் அளித்த விளக்கத்தை பரிசீலனை செய்யாமல், பல்கலை இணைப்பு வழங்க மறுத்து, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
கல்லுாரி நிர்வாகம் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில், இணைப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்து, பல்கலை, 15 நாட்களில் புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.