நீதி கிடைக்கும் வரை போராட்டம்: ஏ.பி.வி.பி., அமைப்பு அறிவிப்பு
நீதி கிடைக்கும் வரை போராட்டம்: ஏ.பி.வி.பி., அமைப்பு அறிவிப்பு
ADDED : டிச 28, 2024 04:01 AM

சென்னை:'சென்னை அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாமல் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்' என, ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.
அலட்சியம்
இந்த அமைப்பின் வடதமிழகம் இணை செயலர் வேதாஞ்சலி வெளியிட்ட அறிக்கை:
அண்ணா பல்கலையில் இரண்டு நாட்களுக்கு முன், மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, பல்வேறு இடங்களில் போராட்டம் நடக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்காக, அரசு தரப்பில் இருந்து எவ்வித ஆதரவும் இல்லை.
தி.மு.க., அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டும், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ஏ.பி.வி.பி., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
தி.மு.க., அரசை கண்டித்து, சென்னையில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய, ஏ.பி.வி.பி., மாநில செயலர் யுவராஜ் தாமோதரன் உள்ளிட்ட மாணவர்களை, ஏ.பி.வி.பி., மாநில அலுவலகத்தில், நேற்று அதிகாலை 4:00 மணி அளவில், 20க்கும் மேற்பட்ட போலீசார், தேச விரோதிகளை கைது செய்வதை போல கைது செய்துள்ளனர்.
காவல் துறையின் அடக்குமுறை, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தி.மு.க., அரசு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நீதி கேட்டு போராடும் மக்கள் மற்றும் மாணவர்களின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.
காப்பாற்ற திட்டமா?
ஜனநாயக நாட்டில் பேசுவதற்கு, தங்கள் கருத்தை தெரிவிப்பதற்கு, சுதந்திரம் இல்லாமல், தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியாக மாறி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
குற்றவாளி தன் கட்சிக்காரன் என்பதால், அவரை காப்பாற்றும் நோக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட்டது, அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது.
நீதி கேட்டு போராடியதால் கைது செய்யப்பட்ட, ஏ.பி.வி.பி., மாநில செயலர் மற்றும் மாணவ தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, எந்தவித அரசியல் தலையீடுகளும் இல்லாமல், நீதி கிடைக்கும் வரை, ஏ.பி.வி.பி.,யின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

