UPDATED : ஜன 18, 2024 11:10 AM
ADDED : ஜன 17, 2024 11:36 PM

சென்னை : 'தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை என்ன செய்தீர்கள்?' என, தமிழக அரசிடம் கணக்கு விபரங்களை கவர்னர் ரவி கேட்டுள்ளார். அவரது கடிதம், தலைமை செயலர் வாயிலாக அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு துறைகள் வாயிலாக மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பெரும்பாலான திட்டங்கள், மத்திய அரசின் நிதியை அடிப்படையாக வைத்து தமிழக அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
இத்திட்டங்களில் குறிப்பிட்ட அளவு தொகையை, தமிழக அரசும் செலவிட வேண்டும் என்பது நடைமுறை. இந்நிலையில், தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்தே மத்திய அரசு உரிய நிதியை வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது என, அரசின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
இதற்கு மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் அவ்வப்போது புள்ளி விபரங்களுடன் பதில் அளித்து வருகின்றனர். என்றாலும், மத்திய அரசுக்கு தமிழக மக்களிடம் கெட்ட பெயர் உண்டாக்கும் விதமாக திட்டமிட்டு பிரசாரம் நடப்பதாக பா.ஜ. மேலிடம் கருதுகிறது.
இந்த பின்னணியில் தான், தமிழக அரசின் நிர்வாக தலைமை என்ற அடிப்படையில், மக்கள் நலத் திட்டங்களில் மாநில அரசின் நிதி பங்களிப்பு மற்றும் செயலாக்கம் சார்ந்த கணக்கு வழக்குகளை தெரிந்துகொள்ள கவர்னர் முன்வந்துள்ளார் என ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் என்ன, அதில் மத்திய - மாநில அரசுகளின் நிதி பங்களிப்பு என்ன, தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2023 டிசம்பர் முடிய பெறப்பட்ட நிதி எவ்வளவு, அதில் எவ்வளவு தொகை எந்த வகையில் செலவிடப்பட்டது என்ற தகவல்களை பட்டியலாக தொகுத்து அனுப்புமாறு தமிழக அரசை கவர்னர் கேட்டுள்ளார்.
அவரது கடிதம் கவர்னரின் செயலர் கிர்லோஷ் குமார் வழியாக தமிழக அரசின் தலைமை செயலர் ஷிவ்தாஸ் மீனாவுக்கு ஜன. 8ல் அனுப்பப்பட்டது. கவர்னர் கேட்டிருக்கும் தகவல்களை திரட்டி அனுபபும்படி, அனைத்து துறை செயலர்களுக்கும் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அவசர முக்கியத்துவம் அடிப்படையில் இந்த விபரங்களை அனுப்புமாறு தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளதால், அனைத்து துறைகளிலும் அலுவலர்கள் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
முழுமையான விபரங்கள் கிடைக்கும்போது, மத்திய அரசு மீது மாநில அரசு கூறும் புகாரின் உண்மைத்தன்மை வெளிச்சத்துக்கு வரும் என பா.ஜ. மேலிடம் எதிர்பார்க்கிறது. நலத்திட்டங்களில் தமிழக அரசின் உண்மையான பங்களிப்பும் மக்களுக்கு தெரிய வரும் என்கிறது.