பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண் பெற்று சாதனை
ADDED : மே 16, 2025 11:12 PM

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 499 மதிப்பெண் பெற்று, பொள்ளாச்சி, உடுமலையை சேர்ந்த மாணவ - மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யலட்சுமி, 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். மாணவியின் தந்தை பால் ஏஜன்சி நடத்தி வருகிறார். இம்மாணவி தமிழில், 99 மதிப்பெண்ணும், மற்ற பாடங்களில் தலா 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மாணவி திவ்யலட்சுமி கூறுகையில், ''ஆர்வத்துடன் படித்ததால், இந்த மதிப்பெண் பெற முடிந்தது. விருப்பத்துடன் படித்தால் மன அழுத்தம் இல்லாமலும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதலாம். பெற்றோர் கார்த்திகேயன் - சாந்தாமணி, பள்ளி நிர்வாகத்தினர் ஊக்குவித்தனர். அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஆசிரியர்களின் பயிற்சி முக்கிய காரணம். மேல்நிலை வகுப்பில், அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சாதனை படைக்க வேண்டும்,'' என்றார்.
நெகமம், சிறுகளங்தை, ஜக்கார்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் - செல்வி தம்பதியின் மகள் சுபஸ்ரீ. சிறுகளங்தை விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். தேர்வில், 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். தமிழில் 99 மதிப்பெண், மற்ற பாடங்களில் தலா 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சுபஸ்ரீ கூறுகையில், ''10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். பிளஸ் 1ல் 'பயோ மேத்ஸ்' பாடப்பிரிவில் படித்து, டாக்டராவதே என் லட்சியம்,'' என்றனர்.
பொள்ளாச்சி அருகே பெரியபோதுவை சேர்ந்த விவசாயி மணிகண்டசாமி - கவுரி தம்பதியின் மகன் கார்த்திக். இவர், கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். பொதுத்தேர்வில், 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இவர், தமிழில் 99, மற்ற பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் பெற்றள்ளார்.
கார்த்திக் கூறுகையில், ''பெற்றோர், விவசாய தொழிலில் உள்ளனர். பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், அனைவரது ஒத்துழைப்பால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. உயர்கல்வியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் படித்து, வருங்கால ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக வேண்டும்,'' என்றார்.
- நிருபர் குழு -