ADDED : பிப் 18, 2024 05:59 AM
சென்னை: போதிய மழை இல்லாததால், நீர் மின் உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 270 கோடி யூனிட்கள் குறைந்துள்ளது. எனவே, மத்திய மின்சார ஆணையத்தின் இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களில் மின் வாரியத்திற்கு, 2,321 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன.
மழை சீசனில், நீர் மின் நிலையங்களுக்கு அருகில் உள்ள அணைகளில் தண்ணீர் தேக்கி, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப் படுகிறது.
தினமும் சராசரியாக, 80 லட்சம் - 1 கோடி யூனிட் வரையும்; தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் போது, 3 கோடி யூனிட் வரையும் நீர் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
மத்திய மின்சார ஆணையம், நடப்பு நிதியாண்டில், நீர் மின் நிலையங்களில், 420 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய தென் மேற்கு பருவமழை சீசனில், போதிய அளவுக்கு மழை இல்லை.
இதனால், அணைகளுக்கு நீர் வரத்து மிகவும் குறைந்தது. இதன் விளைவாக, நீர் மின் உற்பத்தி தினமும் சராசரியாக, 1 கோடி யூனிட்டிற்கு கீழ் குறைந்தது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் ஏப்., முதல் இம்மாதம், 15ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக, 290 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 560 கோடி யூனிட்களாக அதிகம் இருந்தது.
அடுத்த மாதத்துடன் நிதியாண்டு முடிவடைகிறது. எனவே, இந்தாண்டில் மத்திய அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், 420 கோடி யூனிட் மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மின் வாரியம், அதை விட அதிகமாக, 617 கோடி யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்தது.