பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை * அ.தி.மு.க., தீர்மானம்
பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை * அ.தி.மு.க., தீர்மானம்
ADDED : பிப் 05, 2025 07:08 PM
சென்னை:வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிக்கு, இளைஞர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட, அக்கட்சியின் இளைஞர், இளம்பெண்கள் பாசறை முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க., இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம், சென்னையில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், வைகைச்செல்வன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வரும் 16ம் தேதி வேலுாரில், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாநாடு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும், ஓட்டுச்சாவடி வாரியாக, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர்.
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், அத்துமீறிய தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும், 'ஆன்லைன் ரம்மி, டெட்புல், கலர்ஸ், போக்கர்ஸ்' போன்ற சூதாட்ட செயலிகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பரவிவரும் கஞ்சா, அபின், கள்ளச்சாராயம் போன்ற போதை பொருட்களின் புழக்கத்தைத் தடுக்காத தி.மு.க., அரசை கண்டிக்கிறோம்.
வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிக்கு, இளைஞர்கள், இளம்பெண்களை சந்தித்து, ஆதரவு திரட்டப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.