ADDED : அக் 10, 2024 09:16 PM
மதுரை:நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை கோரிய வழக்கில், 'சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தாசில்தார் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்' என, தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகாராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி, சித்தர்நத்தம் வைகை ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை கோரி கலெக்டர், எஸ்.பி., கனிமவள உதவி இயக்குனர், நிலக்கோட்டை தாசில்தாருக்கு புகார் அனுப்பினேன்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மனுதாரர் இணைத்துள்ள ஆவணங்களில் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. இது குற்றச்சாட்டை தெளிவுபடுத்துகிறது.
அரசு தரப்பு, 'நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டதாசில்தார் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனுள்ள தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டதில் நாங்கள் திருப்தி அடைகிறோம். மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.

