போலி நகை கும்பல்கள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி., உத்தரவு
போலி நகை கும்பல்கள் மீது நடவடிக்கை: டி.ஜி.பி., உத்தரவு
ADDED : மார் 17, 2024 03:42 AM

சென்னை : 'போலி நகை தயாரிப்பு கும்பல்கள் குறித்த புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
'அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன், மர்ம கும்பல்கள் போலி நகைகளை தயாரித்து வருகின்றன. இந்த கும்பல்களை சேர்ந்தோர், ஜுவல்லர்ஸ் மற்றும் அடகு கடைகளில் போலி நகைளை வைத்து மோசடி செய்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக அளவிலான பான் புரோக்கர் சங்கத்தினர், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.
இந்நிலையில், 'போலி நகை கும்பல்கள் குறித்து காவல் நிலையங்களில் தரப்படும் புகார்கள் மீது, உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். இந்த கும்பல்கள் குறித்து, உளவுத்துறை போலீசாரும் ரகசிய தகவல்களை சேகரிக்க வேண்டும்' என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
போலீசார் கூறுகையில்,'போலி நகை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அடகு கடைக்காரர்களுடன் கூட்டம் நடத்தி உள்ளோம். மர்ம கும்பல்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது' என்றனர்.

