சட்ட விரோத குவாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
சட்ட விரோத குவாரிகள் மீது நடவடிக்கை: ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 28, 2024 01:35 AM
மதுரை:குவாரிகளை அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறல் மற்றும் சட்ட விரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு ஹோமர்லால் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் சட்ட விரோதமாக கனிமவள குவாரிகள் நடத்தப்படுகின்றன. தடுக்க நடவடிக்கை கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, 'மாவட்டத்தில் குவாரி நடத்த எத்தனை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன' என கேள்வி எழுப்பி, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு முன், கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை:
மாவட்டத்தில் 44 குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 11 கல் குவாரிகள் செயல்படுகின்றன.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் குவாரிகள் செயல்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. குவாரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் குறிப்பிட்டார்.
நீதிபதிகள்: குவாரிகளை அடிக்கடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் மற்றும் சட்ட விரோத குவாரிகள் குறித்து புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
