தரமற்ற மருந்து உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தரமற்ற மருந்து உற்பத்தி செய்த 64 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 04, 2025 12:34 AM
சென்னை:தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த, 64 நிறுவனங்கள் மீது, நீதிமன்றங்களில் வழக்கு தொடர, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம், அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில், விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதி செய்ய, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம், மருந்து கடைகள், மருந்து வினியோக நிறுவனங்கள் மற்றும் கிடங்குகளில், அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்கிறது. அங்கிருந்து பெறப்படும் மருந்துகளின் மாதிரிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
உரிய விகிதத்தில், மூலப் பொருட்கள் இல்லாத மருந்து களும், உரிய தர நிலையில் இல்லாத மருந்துகளும், உட்கொள்ள தகுதி அற்றவையாக அறிவிக்கப்படுகின்றன. அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:
மருந்து விற்பனை மற்றும் உற்பத்தி தரத்தில், முறைகேடு களோ, விதி மீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணை நடத்தி, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜன., முதல் நவ., 30ம் தேதி வரை, நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டன.
அவற்றை உற்பத்தி செய்த, 64 மருந்து நிறுவனங்கள் மீது வழக்கு தொடர, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த மருந்து களில் பெரும்பாலானவை, உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டவை. மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தலைமை நிர்வாகி கள், தமிழக நீதிமன்றங்களில் ஆஜராகி, உரிய விளக்கம் அளிக்க வேண்டியது கட்டாயம். நீதிமன்ற உத்தரவின்படி அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.