உவர்நீர் இறால் பண்ணைகள் அனுமதியின்றி செயல்பட்டால் நடவடிக்கை
உவர்நீர் இறால் பண்ணைகள் அனுமதியின்றி செயல்பட்டால் நடவடிக்கை
ADDED : ஆக 16, 2025 02:06 AM
சென்னை:'உரிய அனுமதியின்றி செயல்படும், கடலோர உவர் நீர் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் இல்லாதவர்கள் முறையாக விண்ணப்பித்து, உரிமம் பெற வேண்டும்' என, மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
இறால் பண்ணைகள் அமைக்க, உரிமம் பெறுவது கட்டாயம். உரிமம் வேண்டி விண்ணப்பிக்காமலும், உரிமம் இல்லாமல் இயங்கினாலும், இறால் பண்ணைகளின் இயக்கம் நிறுத்தப்படும்.
இது தொடர்பாக, முதலில் எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கப்படும். அதன்பின், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பண்ணைகளின் செயல்பாடு முற்றிலும் முடக்கப்படும். அதை தவிர்க்க, அனைவரும் பண்ணைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்து உரிமம் பெற்றவர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தமிழ்நாடு கடலோர இறால் வளர்ப்போர் சங்கத் தலைவர் ரவிபாண்டியன் கூறுகையில், ''தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட உவர்நீர் இறால் பண்ணைகள் உள்ளன. அனைத்து பண்ணைகளும் உரிமம் பெற்று தான் அமைக்கப்படுகின்றன. நிறைய பண்ணை உரிமையாளர்கள் உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்,'' என்றார்.